ADVERTISEMENT

“புள்ளைங்கள பாத்ரூம கழுவ சொல்றாங்க”; அத்துமீறிய அரசுப் பள்ளி தலைமையாசிரியை

06:27 PM Aug 31, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது உடையார்பாளையம் கிராமம். இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் கலையரசி. இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தலைமையாசிரியாக இருக்கும் கலையரசி இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவது, மீறினால் அடிப்பது மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், தலைமையாசிரியர் கலையரசி மீது ஏற்கனவே புகார்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறைக்கு வந்த தலைமையாசிரியர் கலையரசி மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். அப்போது, குழந்தைகள் யாரும் தண்ணீர் குடிக்க கூடாது, கழிவறைக்கு செல்ல கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் சில பெண் குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும், சில தண்ணீர் குடிக்காத சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் இச்சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திடீரென பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, அவர்கள் தலைமையாசிரியர் கலையரசியால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளிடம் நடந்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்தனர். அதில், தலைமை ஆசிரியை மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் உண்மை என நிரூபணம் ஆனதால், அவரை பணியிட மாற்றம் செய்ய மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் தலைமை ஆசிரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தலைமையாசிரியர் கலையரசியின் கொடுமையான செயலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 குழந்தைகள் படித்து வந்த இந்த பள்ளியில் தற்போது 60 குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே இவர் பணியாற்றிய இரண்டு பள்ளிகளிலும் இதே போன்று சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், தலைமை ஆசிரியை கலையரசியை பணி நீக்கம் செய்யும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதே சமயம், தலைமையாசிரியைக்கு எதிராக திடீரென பள்ளிக்குள் திரண்ட பெற்றோர்களால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT