ADVERTISEMENT

புயலில் விழுந்ததாக நல்ல மரங்களை வெட்டிய ஊராட்சிப் பணியாளர்கள்? - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

06:03 PM Dec 05, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘நிவர்’ புயல் வடதமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பயிர்கள் அழிந்துள்ளன. அதேபோல் ஏராளமான மரங்கள் புயல் காற்றில் வேரோடு கீழே விழுந்துள்ளன. புயல் மழையால் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் இடிந்துவிழுதல் போன்றவற்றை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டுமென வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியம் போன்றவற்றுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படியே இழப்பு கணக்கெடுப்பு செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவரின் அந்த உத்தரவின்படி ஊரக வளர்ச்சித்துறை நடந்துகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வேலூர் ஊராட்சி ஒன்றியம் பெருமுகை ஊராட்சியில் பிள்ளையார்குப்பம் என்கிற பகுதியில் நூற்றுக் கணக்கான தைலமரம் வளர்ந்திருந்தன. சமீபத்திய புயலில் அதில் 50க்கும் அதிகமான மரங்கள் வேரோடு கீழே விழுந்துள்ளன. கீழே விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய அதேநேரத்தில், நன்றாக இருந்த மரங்களையும் வெட்டியுள்ளனர், அந்த ஊராட்சியைச் சேர்ந்த ஊராட்சி அதிகாரிகள் எனக் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.


50 அடி, 70 அடி உயரமுள்ள மரங்களை வெட்டி, துண்டு துண்டாக்கிப் போட்டுள்ளனர். இந்த மரங்கள் இப்படிக் கீழே விழக் காரணம், இந்தப் பகுதியில் ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள், செம்மண், மொரம்பு மண்களைச் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்தனர். இவை மரங்கள் இருந்த பகுதியில் நடந்ததால், மரங்களுக்குப் பிடிப்பு இல்லாமல் தற்போது வீசிய புயல் காற்றில் விழுந்துவிட்டன. விழுந்த மரங்கள் குறைவுதான் அதைவிட அதிகமாக, நன்றாக இருந்த மரங்களை வெட்டிப்போட்டுள்ளனர். அதற்குக் காரணம், இங்குள்ள மண்ணை அள்ளவும், மலையை உடைத்து ஜல்லி தயாரிக்கவும், இதுபோல் செய்துள்ளார்கள் என்றார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT