ADVERTISEMENT

“என்ன மாயமென தெரியல..” - ஊராட்சி தலைவர் புகாரால் அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!

05:12 PM Feb 18, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


'என் கெணத்த காணல' என்ற வடிவேலின் சினிமா காமெடி ரொம்ப ஹிட்டானது. அதேபோல், நிஜமாகவே தொலைக்காட்சிப் பெட்டி அறையின் கட்டிடத்தைக் காணவில்லை என்று ஊராட்சித் தலைவர் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டம் மகராஜபுரம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் இசக்கி முத்து. இவர் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

ADVERTISEMENT


அந்தப் புகாரில், மகராஜபுரம் ஊராட்சியில் 1996-97ல் ஜவஹர்லால் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொலைக்காட்சி வைப்பதற்கான கட்டிடம் ஒன்றைக் கட்டி, அதன் அறையில் தொலைக்காட்சியும் வைக்கப்பட்டது. அந்தத் தொலைக்காட்சியில் அந்தப் பகுதி மக்கள் தினமும் நிகழ்ச்சிகளைக் கண்டுவந்தனர். அந்த கட்டிடத்தை ஒட்டிதான் படிப்பகமும் உள்ளது. இந்த நிலையில், அதே இடத்தில் இருந்த அந்தத் தொலைக்காட்சி அறையின் கட்டிடத்தைக் காணவில்லை அதைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது அந்த கட்டிடம் இருந்ததாகக் கூறப்படும் இடத்தில் புல் முளைத்துக் காணப்படுகிறது. மேலும், அந்த கட்டிடம் காணாமல்போய் பல ஆண்டுகளாகிவிட்டது என்றனர். இது குறித்து ஊராட்சித் தலைவர் இசக்கிமுத்து, “தொலைக்காட்சி வைப்பதற்கு அந்த கட்டிடத்தோடு மேலும் பெரியவிளை, அரிதாசபுரம், சுந்தரபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடங்கள் எல்லாம் இருக்கிறது. அது இன்னும் இருப்பதாக ஊராட்சியின் ஆவணங்களிலும் உள்ளது. அதேபோல் காணாமல் போன இந்த கட்டிடமும் இன்னும் இருப்பதாக ஊராட்சி ஆவணங்களில் உள்ளது. ஆனால், அங்கு கட்டிடம் எதுவும் இல்லை. மேலும், அந்த கட்டிடமும் அதன் அருகில் இருக்கும் படிப்பகமும் இன்னும் ஊராட்சியின் பராமரிப்பில் இருப்பதாகவும் அதற்குக் கடந்த ஆண்டுகளில் வர்ணம் பூசியிருப்பதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது என்ன மாயமெனத் தெரியவில்லை” என்றார்.


ஏற்கனவே குமரி மாவட்டம் இரணியல் அருகே கிணற்றைக் காணவில்லை என்று ஊர்மக்கள் போலீசில் புகார் கொடுத்த நிலையில், தற்போது கட்டிடத்தைக் காணவில்லை என்று ஊராட்சித் தலைவர் புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT