ADVERTISEMENT

பார்த்திபன் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாழ்த்துகிறேன்... ரஜினி

03:58 PM May 19, 2019 | rajavel

ADVERTISEMENT

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி தயாரித்துள்ள ''ஒத்த செருப்பு சைஸ்.7'' படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், இயக்குநர்கள் ஷங்கர், கே.பாக்கியராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT



இப்படம் குறித்து பார்த்திபனுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.


அதில் அவர்,

''என்னுடைய அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. நல்ல மனிதர். புதுசு புதுசா சிந்திக்கக் கூடியவர். அவர் சமீப காலமாக நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கியதைப் பார்த்து எனக்கு வருத்தம். ஒரு நல்ல படைப்பாளி, படம் எடுக்காமல் நடிக்கிறாரே என வருத்தப்பட்டேன்.

சமீபத்தில் அவரைச் சந்தித்தபோது என் வருத்தத்தைத் தெரிவித்தேன். 'இப்போ ஒரு படம் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன்' என்று 'ஒத்த செருப்பு' படம் பற்றிச் சொன்னார். இது ஒரு வித்தியாசமான படம். தனி ஒருவர் மட்டுமே நடக்கிற படம்.


1960ம் ஆண்டில், இந்தியில் சுனில்தத் 'யாதே' என்றொரு படத்தில் தனி ஒருவராக நடித்தார். நல்ல பப்ளிசிட்டி செய்யப்பட்டது. எல்லோருக்கும் ஒரு க்யுரியாஸிட்டி. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவிலேயே இந்த 'ஒத்த செருப்பு' 2வது படம். தென்னிந்தியாவில் இதுதான் முதல் படம். அதிலும் குறிப்பாக, பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நடித்தும் இருப்பது ஹாலிவுட்டிலேயே இல்லாத ஒன்று. பார்த்திபனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். ஒன்று, படத்தின் கரு, சப்ஜெக்ட் புதிதாக இருக்க வேண்டும். இதுவரை எவரும் சிந்திக்காததாக இருக்க வேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்க வேண்டும். இரண்டு, மினிமம் பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். மூன்று, சினிமாட்டிக்காக எடுக்காமல் ரியலிஸ்டாக எடுத்திருக்க வேண்டும். நான்கு, படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி செய்ய வேண்டும்.

இந்த நான்குமே பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படத்தில் இருக்கிறது. நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. ரியலிஸ்டாக எடுப்பதில் பார்த்திபன் வல்லவர். நல்ல பப்ளிசிட்டியும் கிடைத்துவிடும்.


ஏனென்றால், என்னுடைய அன்பு நண்பர், உலகநாயகன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நண்பர் இயக்குநர் ஷங்கர், இன்னொரு சகலகலாவல்லவனாகத் திகழும் இனிய நண்பர் பாக்யராஜ் என மூவரும் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய பப்ளிசிட்டியாக அமைந்துவிடும்.

நண்பர் பார்த்திபன், இந்தப் படத்தின் மூலமாக வெற்றிகளும், விருதுகளும் பெறுவார். ஆஸ்கர் முதலான விருதுகள் கிடைக்கவும் வாழ்த்துகள் என வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT