ADVERTISEMENT

மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் தற்போதைய நிலை தொடர  உத்தரவு

11:33 PM Sep 10, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் 17.4.2018-ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ADVERTISEMENT

மதுரை கருவனூர் மந்தைக்குளம் விலக்கை சேர்ந்த கே.செல்லப்பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி தாலுகா தாதன்பட்டி முதல் புதுதாமரைப்பட்டி வரை 29.96 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்படுகிறது. இந்த சாலைக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் 17.4.2018-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பாணையில் சாலை மேம்பாட்டுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களின் விபரங்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை. சர்வே எண்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். மந்தைக்குளம் கிராமத்தில் பல சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனக்கு சொந்தமான 8 சென்ட் நிலமும் அறிவிப்பாணையில் வருகிறது.

மந்தைகுளம் கிராமத்தில் பலருக்கு சொந்தமான நிலங்கள் ஒரே சர்வே எண்களில் வருகின்றன. இதனால் யாருடை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பது தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால் நில உரிமையாளர்களால் சரியான முறையில் ஆட்சேபனைகள் தெரிவிக்க முடியவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விபரங்கள் தரப்படவில்லை.

இதையடுத்து எங்கள் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தோம். ஆனால் எங்கள் ஆட்சேபனைகளை நிராகரித்து சாலை வடிவமைப்பை மாற்ற முடியாது என 24.5.2018-ல் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். நில உரிமையாளர்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க உரிய வாய்ப்பு வழங்காமல் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது சட்டவிரோதம்.

எனவே நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் 17.4.2018-ல் பிறப்பித்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். நில கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணை மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் 24.5.2018-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை இணைப்புக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டும், மனு தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய நெடுஞ்சாலை குழுமம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT