ADVERTISEMENT

நகராட்சி அலுவலகமா? பார்ட்டி கிளப்பா? - கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள்

04:43 PM Feb 06, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர்மன்ற தலைவராக இருப்பவர் சௌந்தர்ராஜன். குடியாத்தம் நகர திமுக செயலாளராகவும் உள்ளார். தனது 55வது பிறந்தநாளை பிப்ரவரி 5 ஆம் தேதி கொண்டாடினார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு வார விடுமுறை தினத்தன்று தனது வீட்டில் இருந்து காரில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார் சேர்மன் சௌந்தர்ராஜன். அங்கே கட்சியினர், சில கவுன்சிலர்கள் சாலை முழுவதும் குழுமியிருந்தனர். சேர்மனின் கார் வந்து நின்றதும் காரில் இருந்து இறங்கிய சேர்மன் நகராட்சி அலுவலகத்தை நோக்கி நடந்தார். சேர்மனின் ஆதரவு மகளிர் அணியினர் அவர் நடந்து வரும் பாதை முழுவதும் பூக்களைத் தூவியும், பட்டாசுகளை வெடித்தும் வரவேற்றனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் 3 அடி நீளத்துக்கு கருப்பு – சிவப்பு கலரில் செய்து வைக்கப்பட்டு இருந்த பிறந்தநாள் கேக்கை தனது மனைவி, பிள்ளைகள் கட்சியினரோடு சேர்ந்து வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிகழ்வை இப்போது எதிர்க்கட்சியினர் சர்ச்சையாக்கி உள்ளனர். நகர்மன்ற தலைவர் என்பவர் நகராட்சியின் முதல் குடிமகன். மக்கள் பிரதிநிதியான அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்கு பதில் அவரே நகராட்சி அலுவலகத்தை பார்ட்டி ஹாலாக மாற்றி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இப்படி நகராட்சி அலுவலகத்தை நாசம் செய்வது சரியா? அவர் பிறந்தநாள் நிகழ்ச்சியை அவர் வீட்டிலோ அல்லது அவர்களது கட்சி அலுவலகத்தில் வைத்திருந்தால் இதனை நாங்கள் யாரும் கேள்வி எழுப்பப் போவதில்லை. அரசு அலுவலகத்தில்; அதுவும் விடுமுறை நாளில்; இரவில் அலுவலகத்தை திறக்க வைத்து இப்படி கொண்டாடியதால் தான் கேள்வி எழுப்புகிறோம்.

நாளை எங்கள் கவுன்சிலர் ஒருவர் தனது பிறந்தநாளை நகராட்சி அலுவலகத்தில் இப்படி கொண்டாடினால் சேர்மன், கமிஷனர் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? பொதுமக்கள் யாராவது வந்து பர்த்டே பார்ட்டி கொண்டாடிக்கொள்ள நகராட்சி அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளட்டுமா எனக் கேட்டால் சேர்மன் என்ன பதில் சொல்வார்? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT