Skip to main content

“இந்த ஊருக்கு இனிமேல் வரக்கூடாது” - ஒன்றிய செயலாளரை விரட்டிய கட்சிக்காரர்கள்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Dissatisfaction with Union Secretary in gudiyatham

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சின்னசேரி கிராமத்திற்கு ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட ஒரு வருடத்திற்கு முன்பு ஆணை வந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தை குடியாத்தம் ஒன்றிய செயலாளர் நத்தம் பிரதீஸ் அதே ஊரைச் சேர்ந்த ஒன்றிய பொருளாளர் பழனி பெயரில் காண்ட்ராக்ட் எடுத்துள்ளார். ஒன்றிய செயலாளர் பிரதீசுக்கும் பழனிக்கும் இடையே வேறு காண்ட்ராக்ட் பணிகளில் பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு இருவரும் எதிரும் புதிருமாக மாறினர்.

 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்றிய செயலாளர் பிரதீஸ், பழனியின் எதிரியான சின்னசேரி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணி என்பவருடன் நட்பு பாராட்டினார். பழனி பெயரில் எடுத்த நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவற்கான ஆணையை ரத்து செய்ய வைப்பதற்காக அந்த இடத்தில் கட்டக்‌கூடாது என்று தகராறு செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் தற்போதுள்ள ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணிக்கு எதிராக பழனி நின்றதால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பின்னர் பழனியும் வார்டு உறுப்பினர்கள் ஐந்து பேரும் சேர்ந்து இந்த பிரச்சினையை ஒன்றிய சேர்மன் சத்யானந்தம், ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆகியோரிடம் கொண்டு சென்றுள்ளனர். அவர்களாலும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. பின்னர் வேலூர் மாவட்டச் செயலாளர் நந்தகுமாரிடம் முறையிட்டதற்கு அந்த இடத்திலேயே கட்டுமாறு கூறியுள்ளார் . பின்னர் பழனி அந்த இடத்தில் பூமி பூஜை போட முயலும்போது, ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணியின் ஆதரவாளருக்கும் ஒன்றிய நிர்வாகி பழனிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பினரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். 

 

இந்த பிரச்சினையை குடியாத்தம் ரெகுலர் பிடிஓ, பிரச்சனை குறித்து  வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதையடுத்து விசாரித்தவர், அதே இடத்தில் கட்டுமாறு கூறியுள்ளார். பிடிஓக்கள், மேனேஜர், என்ஜினியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் புடைசூழ  காவல்துறையினர் பாதுகாப்புடன் நவம்பர் 4 ஆம் தேதி மீண்டும் பூமி பூஜை போட முயலும்போது ஒன்றிய செயலாளர் நத்தம் பிரதீஸ் ஒன்றிய நிர்வாகிகள் இரண்டு பேருடன் வந்து தடுத்துள்ளார்.

 

அப்போது அங்கிருந்த கட்சிக்காரர்கள், வார்டு உறுப்பினர்கள் கோபமாகி, “ஒன்றிய செயலாளராக இருந்தால் அதை உன் ஆபிசில் வைத்துக் கொள். இந்த ஊரில் நாட்டாமை செய்வதற்கு நீ யார்? இந்த ஊருக்கு இனிமேல் நீ வரக்கூடாது, மீறி வந்தால் அவ்ளோதான்” என ஒருமையில் பேசினர்.

 

அங்கிருந்த போலீஸார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆளுங்கட்சிக்காரர்கள் தங்களுக்குள்ள கோஷ்டி சண்டையை வெளிப்படையாகப் பொதுவெளியில் அடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொள்வது அப்பகுதியில் கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.