ADVERTISEMENT

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு; விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரதம் 2வது நாளாக நீடிப்பு

11:09 PM Jun 08, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது, அவ்வாறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று விவசாயிகளின் ஒரு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரி பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் ஈரோடு ஆர்டிஓ சதீஷ்குமார், தாசில்தார் பூபதி ஆகியோர் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, சுந்தரராசு உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கூரபாளையம் பிரிவு ஈரோடு ரோட்டில் ஏராளமான விவசாயிகள் கீழ்பாவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயராது. அதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். நேற்று மாலை தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது. இன்றும் ஏராளமான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை, ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT