கொங்கு மண்டலமான ஈரோடு மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி உயரம் உள்ள இந்த பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக உள்ளது.

water mixes in sea without gain

Advertisment

இதன் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக இருப்பது நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகள். சில தினங்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தனது முழு கொள்ளளவை அணை எட்டியது.

அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 7 ஆயிரத்து 524 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக நேற்று மாலை 17 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் பவானி ஆற்றுக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

water mixes in sea without gain

Advertisment

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் பாதுகாப்பு தடுப்பை தாண்டி செல்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர் இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நீர் அதிகரித்து வருவதால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை10 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 105 அடியில் உள்ளது. அணைக்கு 6705 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 4500 கன அடியும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2200 கன அடியும் என மொத்தம் 6,700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து கூடுவதும் குறைவதுமாக இருப்பதால் அணையின் மேல்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்து குறித்த நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். சுமார் 7 ஆயிரம் கண அடி நீர் எந்த பயனும் இல்லாமல் காவிரியில் கலந்து கடலுக்கு செல்கிறது.