ADVERTISEMENT

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களே சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்! –விதிகளில் திருத்தம் செய்ய பார் கவுன்சிலுக்குப் பரிந்துரை!

01:40 PM Sep 04, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று படித்தவர்கள் மட்டுமே சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற வகையில், பார் கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டுவர, இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.


12-ஆம் வகுப்பை தனித்தேர்வராகவும், பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வியிலும் முடித்த கிருஷ்ணகுமார் என்பவர், சட்டப்படிப்பில் சேர்வதற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பத்தார். தொலைதூரக் கல்வியில் படித்த காரணத்துக்காக கிருஷ்ணகுமார் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.


இதை எதிர்த்து கிருஷ்ணகுமார் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தொலைதூரக் கல்வியில் படித்தவர்களும் சட்டப்படிப்பில் சேர பார் கவுன்சில் விதிகளின்படி தகுதி உண்டு என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று படித்தவர்கள் மட்டுமே சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற வகையில், பார் கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென இந்திய பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளார். அப்படி விதிகளில் திருத்தம் செய்தால் மட்டுமே சட்டக்கல்வியின் தரம் பேணி பாதுகாக்கப்படும் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தற்போதுள்ள விதிகளின்படி, மனுதாரர் கிருஷ்ணகுமார் விண்ணப்பிக்கத் தகுதி உடையவரே என உத்தரவிட்ட நீதிபதி, பிற தகுதிகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில் 2020-21 -ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில் கிருஷ்ணகுமாரை அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT