ADVERTISEMENT

ஒரு பானை தண்ணீர் 15 நாட்களுக்கு போதும்... மரங்களுக்காக 200 மண் பானைகளை வழங்கிய மாணவர்கள்!

07:11 PM Jul 23, 2019 | kalaimohan

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இளைஞர்களின் சொந்த முயற்சியில் அந்த கிராமத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், வரத்துவாய்க்கால்கள், அணைக்கட்டுகளை சீரமைத்து வருகின்றனர். இளைஞர்களின் இந்தபணியை பலதரப்பினரும் பாராட்டினாலும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் இளைஞர்களின் இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதியவர்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்கள் சேமிப்புகளை நீர்நிலை சீரமைப்பிற்காக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சீரமைக்கப்படும் நீர்நிலைகளில், கரைகளில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தில் முதல்கட்டமாக சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கால்நடைகளிடம் இருந்து காப்பாற்ற கூண்டுகள் அமைத்துள்ளனர். மேலும் தினசரி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற பெண்களை நியமித்ததுடன் தண்ணீர் குடங்களை எளிதாக எடுத்துச் செல்ல அதற்காண வண்டிகளையும் இளைஞர்கள் வாங்கி வழங்கி உள்ளனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்நிலையில் செவ்வாய் கிழமை அலஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள குருகுலம் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி சிவநேசன் ஆகியோர் ஒரு வேனில் சுமார் 200 மண் பானைகளை கொண்டு வந்து கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினரிடம் வழங்கினார்கள். மேலும் மரக்கன்றுகளுக்கு தினசரி தண்ணீர் ஊற்றி தண்ணீரை வீணாக்காமல் கன்றுகளுக்கு அருகில் பானையை புதைத்து சிறிய ஓட்டை போட்டு வைத்தார் தண்ணீர் மரக்கன்றின் வேர் பகுதியில் பல நாட்கள் கசிந்து கொண்டிருக்கும். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று கூறியதுடன், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் மாணவிகளே செய்து காட்டினார்கள்.


இது குறித்து குருகுலம் சிவநேசன் கூறும் போது.. தற்போது நிலடித்த நீர் பற்றாக்குறையால் மண்ணில் ஈரப்பதம் இல்லை. அதனால் மரக்கன்றுகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் உடனே காய்ந்துவிடும். அதனால் கன்றுகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் வளர்வதில்லை. ஆனால் மரக்கன்றுகளோடு ஊசி முனை அளவு ஓட்டை போடப்பட்ட மண்பானையை புதைத்து தண்ணீர் ஊற்றி வைத்தால் அந்த தண்ணீர் ஒரு வாரத்திற்கு மேல் மரக்கன்றுகளின் வேர் பகுதியில் கசிந்து 15 நாட்களுக்கு மேல் ஈரம் காக்கப்படும். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம். கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை அறிந்து எங்கள் பள்ளி மாணவர்கள் பானை வழங்க முன்வந்தனர். அவர்களே பானைகளையும் கொண்டும் வந்தனர். அந்த பானைகளை வழங்கியதுடன் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் செய்து காட்டியுள்ளோம். இதேபோல மரக்கன்றுகள் நடப்படும் அனைத்து இடங்களிலும் பானைகளை பயன்படுத்தி கசிவு நீர் பாசனம் செய்தால் அதிகளவில் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT