ADVERTISEMENT

சிற்ப கலைஞர் கத்தியால் குத்தி கொலை; மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்! 

11:20 AM Jun 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கோயில் சிற்ப கலைஞரை நண்பரே கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (24). சிற்பக் கலைஞர். இவர், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓலப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சிற்ப வேலைகள் செய்து வந்தார். இவருடன், ஒரே ஊரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களான சீனிவாசன் (33) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரும் வேலை செய்து வந்தனர்.


இவர்கள் அனைவரும் கோயில் அருகிலேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில், ஜூன் 2ம் தேதி, செந்தில்குமாருக்கு பிறந்த நாள் என்பதால், உடன் வேலை செய்து வந்த சிற்ப கலைஞர்கள் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடினர். செந்தில்குமார், அனைவருக்கும் மது விருந்து கொடுத்துள்ளார். உடன் வேலை செய்து வந்த சிற்ப கலைஞர்கள் எல்லோரும் மதுபோதை தலைக்கேறிய நிலையில், அவரவர் அறைகளுக்குச் சென்று விட்டனர். அதன்பிறகு, செந்தில்குமாரும் சீனிவாசனும் மட்டும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில், இருவரும் ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.


ஒரு கட்டத்தில் அவர்களிடையே கைகலப்பு மூண்டது. ஆத்திரம் அடைந்த சீனிவாசன், அருகில் கிடந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகராறு நடக்கும் சத்தம் கேட்டு உடன், வேலை செய்து வரும் மற்ற சிற்பக் கலைஞர்கள் அங்கு ஓடிவருவதற்குள் சீனிவாசன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த செந்தில்குமாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து அவர்கள் வெண்ணந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT