/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jaya22.jpg)
நாமக்கல் அருகே, கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவருடைய மகன் ஜெயக்குமார் (40). பட்டறைமேடு என்ற இடத்தில் கண்ணாடி கடை நடத்தி வந்தார். கடந்த ஜூன் 30- ஆம் தேதி இரவு 08.00 மணிக்கு கடையை பூட்டிய அவர், நீண்ட நேரமாகியும் வீட்டுக்குச் செல்லவில்லை.மறுநாள் (ஜூலை 1) காலையில் அவர், நாமக்கல் அருகே உள்ள பெருமாப்பட்டியில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. உடலில் பல இடங்களில் கத்திக்குத்து, அரிவாள் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு, சடலத்தை வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ஜெயக்குமாரின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை நடந்தது. இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக கூலிப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்கிற டான் சரவணன் (30), சஞ்சீவி (33), நிவாஷ் (24), சேலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (26) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jayakumar 45633333.jpg)
இந்தக் கொலையில் சரவணன் என்கிற டான் சரவணன்தான் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலம்: ஜெயக்குமாரிடம் கடந்த ஆண்டு, எனது நண்பர் சஞ்சீவி, தன்னுடைய மோட்டார் சைக்கிளை அடமானம் வைத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஓராண்டாகியும் மோட்டார் சைக்கிளை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. அசல் தொகை கொடுத்த பிறகும், சஞ்சீவிடம் அதிக பணம் கேட்டு வந்தார் ஜெயக்குமார். மோட்டார் சைக்கிளின் ஆர்சி புத்தகத்தைக் கேட்டும் தொல்லை கொடுத்து வந்தார்.
மேலும், எனக்கும் ஜெயக்குமாருக்கும் வேறொரு விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. அதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.ஜூன் 30- ஆம் தேதியன்று இரவு, பெருமாபட்டியில் ஜெயக்குமார் தனியாக அமர்ந்து மது குடித்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்துவிட்ட நான், எனது நண்பர்கள் நிவாஷ், சஞ்சீவி, பாண்டியராஜன் ஆகியோரை வரவழைத்து திட்டம் போட்டோம்.
பின்னர் நான் மட்டும் தனியாக ஜெயக்குமாரை அழைத்துச்சென்று மது குடித்தோம். குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி நண்பர்கள் மூன்று பேரும் பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டைகளுடன் அங்கு வந்தார். நான் ஜெயக்குமாரை கத்தியால் வெட்டிக் கொன்றேன். அவரை தப்பிச்செல்லாமல் நண்பர்கள் பிடித்துக்கொண்டனர். இவ்வாறு டான் சரவணன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கைதான நான்கு பேரையும் காவல்துறையினர் நாமக்கல் முதலாவது மாஜிஸ்ட்ரேட் தமயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருடைய உத்தரவின்பேரில், நான்கு பேரையும் ராசிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)