ADVERTISEMENT

‘ஒருவர் பெயரில் உள்ள பல மின் இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும்’ - உலவும் வதந்தி

10:43 AM Mar 08, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவெறும்பூரில் பணியாற்றும் உதவி பொறியாளர் மின் நுகர்வோர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், ‘மின் நுகர்வோரான நீங்கள் உங்கள் வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட பார்வையின்படி ஒரு வளாகத்திற்கு ஒரு மின் இணைப்பு என்ற அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க (மெர்ச்) உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே இக்கடிதம் கிடைக்கப்பெற்ற பதினைந்து தினங்களுக்குள் தங்களது மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு, உதவி மின்பொறியாளர் இயக்குதலும் காத்தலும் திருவெறும்பூர்’ எனக் கையெழுத்தும் இடப்பட்டுள்ளது.

இக்கடிதம் சமூக வலைத்தளத்தில் உலவி பொதுமக்களை பீதியடைய வைத்திருக்கிறது. இந்த தகவல் அரசின் கவனத்திற்கு சென்றதும் உடனடி நடவடிக்கையாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குறிப்பிட்ட அந்த உதவி மின்பொறியாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததோடு அப்படிப்பட்ட தகவல்கள் முற்றிலும் தவறானது என அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்திற்கு மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதாகவும், அதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தும் பதியப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

இந்த கருத்து முற்றிலும் தவறானது, மேலும் உண்மைக்கு புறம்பானதாகும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 9/9/2022 அன்று வெளியிட்ட விபரப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துகளின்படி கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில் அல்லது குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் சில நிர்வாகக் காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அந்த அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT