Minister Thangam thennarasu important announcement on Nellai, Thoothukudi electricity tariff extension' -

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு செய்வதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது. மேலும், மின் உபயோகிப்பாளர்களின், மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும், இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்துள்ளார்.