ADVERTISEMENT

விவசாய நிலங்களில் ஊடுறுவிய ஒற்றை யானை!!! இதுவரை...

07:46 PM Jun 10, 2019 | kamalkumar

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி, மரவள்ளிக்கிழங்கு, கரும்பு, தென்னை சாகுபடி செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT


கேரள வனப்பகுதியில் இருந்து வழி மாறி வந்த ஒற்றை யானை கடந்த சில ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வருகிறது. அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வதால் விவசாயிகள் கடும் அச்சமடைந்தனர்.

தேவாரம் அருகே பெரம்புபட்டி ஓடைப்பகுதயில் உள்ள தென்னந்தோப்பில் அய்யாவு என்ற விவசாயி தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு புகுந்த ஒற்றை யானை அவரை தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அய்யாவு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மற்றொரு தென்னந்தோப்பில் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த ஆட்டுக்கிடையை நாசம் செய்தது. பின்னர் 2 ஆடுகளை தூக்கி வீசியதில் அவை உடல் சிதறி உயிரிழந்தன. மேலும் காவலுக்கு இருந்த கெப்புராஜ் என்பவரையும் பயங்கரமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் தேவாரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்... ஒற்றை யானையால் விவசாயிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேரை கொன்றுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் சேகர் என்ற விவசாயியை அடித்துக் கொன்றது. பொள்ளாச்சி மற்றும் டாப் சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி நடந்தது.

ஆனால் ஒற்றை யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதால் பிடிபடவில்லை. கடந்த சில நாட்களாக விவசாய பயிர்களை சேதம் செய்து வந்தது. தற்போது மேலும் ஒரு உயிரை காவு வாங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் விவசாய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT