ADVERTISEMENT

ஒரு கடைக் கூட வராத சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக பாயாசம் விற்கும் முதியவர்!

08:15 PM Oct 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் வாரச்சந்தைகள் கூடும் நாட்கள் குழந்தைகளுக்கு கொண்டாட்டமான நாட்களாக இருந்தது. சந்தைக்கு போகும் தாய், தந்தைத் தங்களுக்கு ஏதாவது திண்பண்டங்கள் வாங்கி வருவார்கள் என்ற ஆவலும், ஆசையும் அந்த குழந்தைகளிடம் இருக்கும். தீபாவளி பொங்கல் காலமென்றால் சந்தையில் தான் புது துணிகள் வாங்கிக் கொடுப்பார்கள். இது எல்லாம் அனுபவித்தவர்கள் இப்போது நினைத்தாலும் மகிழ்கிறார்கள்..

காய்கறி, கறி, மீன், கருவாடு, துணிகள், கூடை, பாய், பாசி மணி, பவளம், முருக்கு உள்ளிட்டவை விற்பனை செய்யும் ஒரே இடமாக வாரச் சந்தைகள் இருக்கும். அதாவது இன்றைய சூப்பர் மார்க்கெட்டு போல.. ஒரு கிராமத்தில் சந்தை நாளில் சுற்றியுள்ள பல கிராம விவசாயிகளும், மக்களும் சென்று ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். பல கிராமங்களைச் சேர்ந்த உறவுகளின் நலன் விசாரிப்பு மையங்களாகவும் சந்தைகள் செயல்பட்டது.

ஆனால், இப்போது அந்த பழமையான சந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பெரும் பெயர் பெற்ற சந்தைகள் கூட இன்று இருந்த இடம் தெரியாமல் உள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் சனிச்சந்தை மிகப் பிரபலமான சந்தை. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரை மேலே குறிப்பிட்ட அனைத்தும், இங்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரே ஒரு மீன் கடைதான் வருகிறது.

ஆனால் கூட்டமே கூடாத சந்தையில் பாயாசம் விற்பனை செய்ய ஒருவர் மட்டும் இன்று வரை வந்துக் கொண்டிருப்பது தான் வியப்பு. ஆனால் சனிக்கிழமை சந்தைக்கு போனால் பாயாசம் குடிக்கலாம் என்ற நம்பிக்கையில் பலரும் பக்கத்து கிராமங்களில் இருந்தும் தேடி வருவது இன்னும் சிறப்பு.

"ஒரு பெரிய கிளாஸ் பாயாசம் 15 பைசாவுக்கு விற்கும் காலத்தில் இருந்து சனிக்கிழமையில பாயாசம் விற்பனை செய்து வருகிறேன். இப்ப சந்தையே இல்லை என்றாலும், நான் கடை போடுவேன், எனக்காக தேடி வந்து பாயாசம் குடிக்கிற மக்கள் வந்துகொண்டு தான் இருகிறார்கள். அவர்களை ஏமாற்ற விருப்பமில்லை. அவர்களுக்காகவே பாயாசக்கடை போட வேண்டியுள்ளது. இப்ப சின்ன ஒரு கிளாஸ் பாயாசம் ரூபாய் 5- க்கும், பெரிய கிளாஸ் பாயாசம் ரூபாய் 10- க்கும் விற்கிறேன். ஒரு நாள் முழுக்க விற்றால் ரூபாய் 100 முதல் 200 வரை கிடைக்கும். அது போதும் எனக்கு என்கிறார்" பாயாசக்கடை சின்னத்துரை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT