ADVERTISEMENT

அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வி - நெடுவாசல் கிராம மக்கள் வெற்றி

08:15 PM Jun 18, 2018 | Anonymous (not verified)


நெடுவாசல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்களின் கோரிக்கையையடுத்து கடை மூடப்பட்டது. மீண்டும் கடையை திறக்க டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கடைவீதியில் இருந்த டாஸ்மாக் கடை ஒதுக்குபுறமாக வயல் பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஹைட்ரோ கார்ப்பன் போராட்டத்திற்கு டாஸ்மாக் கடையால் தொய்வு ஏற்படுகிறது என்று குற்றம்சாட்டி வந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த மே தின கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல மே 25 ந் தேதி நடந்த கிராம கூட்டத்திலும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதுடன் கிராம மக்கள் திரண்டு டாஸ்மாக் கடைக்கு ஊர்வலமாக சென்று கடையை மூட கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிறகு கிராமத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர், ஆலங்குடி வட்டாச்சியர் என பலரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ADVERTISEMENT

நெடுவாசல் கிராம மக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் கடையில் இருப்பு உள்ள மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டவுடன் 18 ந் தேதி டாஸ்மாக் கடை மூடப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தனர். அதிகாரிகளின் உத்தரவாதத்தை ஏற்று அமைதியாக இருந்தனர்.
இந்த நிலையில் 18 ந் தேதி திங்கள் கிழமை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் கடையை முற்றுகையிடுவோம் என்று கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் வழக்கமாக கடை திறக்கும் பகல் 12 மணி வரை பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் 17 ந் தேதி இரவு பூட்டப்பட்ட கடை திறக்கவில்லை. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன், ஆலங்குடி வட்டாட்ச்சியர் ரெத்தினாவதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நெடுவாசல் கிராமத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நெடுவாசல் கிராம பிரதிநிதிகளை சந்தித்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 ந் தேதி வரை கால அவகாசம் கேட்கப்பட்டது. கிராமத்தின் சார்பில் அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து கிராமம் அமைதியானது. ஆனால் இனி மேலும் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம். இன்று மூடப்பட்டதுடன் நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூறினார்கள். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு அதன்படி செய்யலாம் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கூறினார். இதனால் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கும் அதிகாரிகளின் முயற்சியும் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இனிமேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் போராட்டங்களை நடத்துவோம் என்கின்றனர் பொதுமக்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT