ADVERTISEMENT

குளத்துக்குள்ள எப்படி சார் குடியிருக்கிறது..? அதிகாரிகளின் அலட்சியத்தால் வேதனை

12:06 PM Jan 27, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை அருகே உத்தூரில் மூன்று பெண் குழந்தைகளோடு இருக்க இடம் கேட்டதற்கு ஊர் பொதுக் குளத்தில் குடிமனை பட்டா வழங்கியதோடு, குளத்திற்கு வீட்டு வரி ரசீது வழங்கிய கொடுமை வேதனை அளிக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், எரவாஞ்சேரி ஊராட்சி உத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாதவன் சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு ஏழாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக வீடோ, வீடு கட்ட இடமோ இல்லாததால் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனைக்கேட்டு வீடு கட்டி தரும்படி மனு அளித்திருந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்பல் ஊராட்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாதவன் மனைவி சசிகலா பெயரில் குடிமனை பட்டா வழங்கியுள்ளார். தங்களுக்கு கொடுத்த பட்டா சர்வே எண்ணைக் கொண்டு தங்களுடைய கிராமத்தில் இடத்தை தேடிய அலைந்தனர். அந்த பட்டாவுக்கு உரிய இடம் எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் தவித்தனர்.

மனம் நொந்த மாதவனும் அவரது மனைவியும் நாகை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனக்கு கொடுத்த பட்டாவை கொடுத்து அந்த இடத்தை கண்டுபிடித்து தரும்படி கேட்டுள்ளனர். சர்வே எண்ணைக் கொண்டு ஆய்வு செய்த வட்டாட்சியருக்கு பேரதிர்ச்சி, ‘உங்களுக்கு கொடுத்த பட்டா இடம் ஊர் பொது குளத்திற்குள் இருக்கே, அத்திப்பட்டியை கடல் அடித்துச் சென்றதுபோல, உங்க இடத்தை குளம் அடித்துப் போயிருக்குமோ என்று தெரியல’ எனக் கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாதவனும் அவரது மனைவியும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் நாகை வட்டாட்சியரிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட குடிமனை பட்டா ஊர் பொது குளத்தில் இருப்பதால் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பலமுறை நடையாய் நடந்தனர். தாசில்தாரோ வேறு மனை வழங்காமல் கொடுத்த பட்டாவையும் திரும்ப வாங்கி சென்றுள்ளனர். அதோடு இல்லாமல் ஊராட்சி நிர்வாகத்தினரோ குளத்தில் உள்ள குடிமனை பட்டாவிற்கு வீட்டு வரி ரசீதும் கொடுத்து அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT