ADVERTISEMENT

ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்றும் இன்றும் ஒன்பது மணி நேரம் விசாரணை!

06:28 PM Mar 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், இரண்டாவது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது. இரண்டாவது நாள் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் சார்பில் 120 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், சசிகலா சார்பில் 34 கேள்விகளும், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் 11 கேள்விகளும் கேட்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்று (21/03/2022) காலை, மதியம் என மூன்று மணி நேரமும், இரண்டாம் நாளான இன்று (22/03/2022) காலையில் சுமார் மூன்று மணி நேரமும், மாலையில் சுமார் மூன்று மணி நேரமும் என மொத்தம் ஒன்பது மணி நேரம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திடம் முழுமையாக விசாரணை நடைபெற்றுள்ளதால், அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை இன்று மாலையுடன் நிறைவுபெற்றுள்ளது.

விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து பார்ப்போம். அதில், "ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித் திட்டம் தீட்டவில்லை; ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமில்லை. சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும், அபிமானமும் இன்று வரை உள்ளது. ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த நிலையில், நான் மிகுந்த துயரத்துடன் அழுதுக் கொண்டிருந்தேன்; அழாதே தைரியமாக இரு என்று ஜெயலலிதா கூறினார். மூன்று தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும். ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன் நான் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் நேரில் பார்த்தோம். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது, அவருக்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்து தெரியாது. பொதுமக்களிடம் சந்தேக கருத்து வலுத்ததால்தான் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாம் நாளில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியதைத் தவிர, சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT