ADVERTISEMENT

'இது தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனம்!!' -சீமான்

06:14 PM Jul 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

'கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன், 15.07.2020 இரவு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர், நேற்று மதியம் 3 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியிலிருந்து சுரேந்திரனை மத்திய குற்றப்பிரிவு சென்னை போலீசார் அழைத்து வந்து விசாரித்தபின் சுரேந்தர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு 30- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''தமிழர்களின் ஐவகை நிலங்களுக்கு முதன்மை நிலமாக திகழும் குறிஞ்சி திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கி போற்றுவதும் தமிழனின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.

தமிழர்களின் பெருத்த பண்பாட்டு அடையாளமாக இருக்கின்ற தமிழ் இறையோன் முருகனை கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனம். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றையும், பண்டைய அடையாளங்களை மீட்டெடுக்கும் பணியையும் செய்ய வேண்டிய தருணத்தில் தமிழின முன்னோர்களை இழித்துரைத்து பரப்புரை செய்யும் செயல்கள் கருத்துரிமை வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்'' என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT