ntk

Advertisment

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மே-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,380- லிருந்து 1,51,767 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,167- லிருந்து 4,337 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60,491- லிருந்து 64,426 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 83,004 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் காடுகளைத் தனியார் மயமாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கரோனோ தீநுண்மி நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. நதிநீர் ஆணையங்களை மத்திய புனலாற்றல் அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றது, இலவச மின்சாரத்தை இரத்து செய்யக்கூடிய வகையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களைத் தன்வயப்படுத்தியது என மாநில உரிமைகளை வலுக்கட்டாயமாகப் பறித்து, மாநிலங்களை அதிகாரம் ஏதுமற்ற ஒரு உள்ளாட்சி நிர்வாக அமைப்பு போல மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயல்கிறது என்றும், அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும் அதை நிறைவு செய்யும் சேவையாகவும் இருக்க வேண்டுமேயன்றி, மனிதர்களில் ஒரு சாரர் வளமோடு வாழ்வதற்காக மற்ற உயிர்களையும் அவை வாழும் இடங்களையும் வளங்களையும் அழிப்பதென்பது சிறிதும் மாந்தநேயமற்ற கொடுங்கோன்மையின் உச்சமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.