ADVERTISEMENT

உரிய மருத்துவம் அளிக்கவில்லை.. அரசு மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

07:23 AM Dec 31, 2023 | tarivazhagan

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாரத்பாபு. இவர், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 22.ந் தேதி முதுகு வலி காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக உரிய மருத்துவம் அளிக்காமல் பணியிலிருந்த மருத்துவர் பிரவீன்குமார், உடன் இருந்த உறவினர்களுக்கு எந்தவித நோய் குறித்த தகவலையும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், 5 நாட்களுக்கு பிறகு கடந்த 29.ந் தேதி பணியிலிருந்த மருத்துவர், வழக்கறிஞரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சில மணி நேரத்தில் வழக்கறிஞர் பாரத்பாபு உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த ஆம்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு நான்கு நாட்களாக உரிய மருத்துவம் அளிக்காமல் உறவினர்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் அலைக்கழித்து வந்த மருத்துவர் பிரவின்குமாரை கண்டித்து அவரை கைது செய்யக் கோரி அரசு மருத்துவமனை முன்பு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த காவல்துறையினரிடம் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மருத்துவ அலுவலரிடம் புகார் அளிக்க சென்ற போது, அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் இல்லாததால் மருத்துவ அலுவலர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் வந்த பணி மருத்துவர் யோகேஸ்வரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு முறையான பதில் அளிக்காததால் அங்குப் பணி மருத்துவரிடம் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் மதிவண்ணன், அரசு மருத்துவமனையில் சாதாரண முதுகு வலிக்காக சேர்க்கப்பட்ட வழக்கறிஞருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் நான்கு நாட்களாக காலம் தாழ்த்தி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் பிரவீன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர் வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு எந்த அளவில் மருத்துவம் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT