ADVERTISEMENT

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் தீ விபத்து

01:13 PM Aug 03, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

கோப்புப்படம்

ADVERTISEMENT

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த ஜூலை 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

மேலும் என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. இந்தச் சூழலில் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவசாயி முருகன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், “ன்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2 வது சுரங்கத்தில் உள்ள மேல் மண் அள்ளும் ராட்சத இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரம் எரிந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கன்வேயர் பெல்டில் சரிவர பராமரிப்புப் பணி நடைபெறாததால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT