ADVERTISEMENT

துவங்கிய நெய்தல் திருவிழா! களைகட்டும் தூத்துக்குடி! 

02:37 PM Jul 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் நெய்தல் திருவிழா நடக்கிறது. தூத்துக்குடியின் வ.உ.சி. கல்லூரியின் மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நான்கு நாட்களும் மாலை 4.30 மணிக்கு நெய்தல் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பறையாட்டம், நையாண்டி மேளம், புலியாட்டம் என தமிழக கிராமிய கலைஞர்கள் அசத்துகிறார்கள்.

நெய்தல் திருவிழாவை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்துகிறது. கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கவும், மண் சார்ந்து கலைகள் மரித்துப் போகாமலிருக்கவும், அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிற வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேற்று துவக்கப்பட்ட நெய்தல் திருவிழாவைத் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி துவக்கி வைத்தார்.

அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் நெய்தல் திருவிழா துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தத் திருவிழாவில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “தமிழக பாரம்பரியம், கலாச்சாரம், வாழ்க்கை முறை, பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களைப் பாதுகாக்க வேண்டும். அதனை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்கிற வகையில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. இதன் வழியே பாரம்பரியக் கலைகளையும் அறிந்து கொள்ளலாம்” என்றார்.

தொடக்க விழாவில் பேசிய கனிமொழி எம்.பி., “நம்முடைய மண் சார்ந்த கலைகள் ஒரு மாபெரும் பொக்கிஷம். நம் வாழ்க்கையை இந்தக் கலைகள் அதன் உள்ளே வடிவமைத்துக் கொள்கிறது. மற்றக் கலைகள் வெளியில் இருக்கக் கூடிய தேடல்களை மதம் சார்ந்த, இறை உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடியவையாக உள்ளன. வெள்ளம், வறட்சி, வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லுதல், சின்னச் சின்ன கனவுகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்யக்கூடியது மண் சார்ந்த கலைகளே” என்றார்.

தமிழர்களின் பாரம்பரிய பறை இசை முழக்கத்துடன் துவங்கிய நெய்தல் கிராமிய கலைத் திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாணவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி நடந்தது. இவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி காண்போர்களை வியக்கவைத்தது. ‘தேன்மொழி ராஜேந்திரன் குழு’வினரின் காவடியாட்டம், புலியாட்டக் கலைஞர்களின் மிரட்டல் ஆட்டம், காஜாமொய்தீன் குழுவினரின் சூபி பாடல்கள், டேவிட் குழுவினரின் பறையாட்டம் போன்ற ஆட்டத் திருவிழாக்கள், தமிழக மண் சார்ந்த கலைகள் மரித்துப் போகவில்லை. அவைகள் மலை போன்று ஓங்கி உயர்ந்து நிற்கின்றன என்கிற கலாச்சாரத் திருவிழாவாக தூத்துக்குடி நகரில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. மாணவ மாணவிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரநிதிகள் என பார்வையாளர்களின் கூட்டம் அலையடிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT