கமல் தயங்கியதை சரத்குமார் செய்தபோது, போராட்டக் களத்தில் இருந்த மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. ஸ்டெர்லைட் ஆலைக் கழிவினால் கலங்கியிருந்த குடிநீர் பாட்டிலை போராட்டக்காரர்கள் கொடுத்தபோது... கடகடவென குடித்தார் சரத்குமார். ""உங்கள் பாதிப்பு எனக்கும்தான்'' என்றார். "ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும், போராடும் மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்' என்றும் சரத்குமார் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்குப் பக்கத்தில்… வெறும் 3 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கிறது மீளவிட்டான் கிராமம். ""ஆலை இங்கு அமைந்தது முதல் தினமும் அவஸ்தைப்படறோம். ஆலை நிர்வாகமோ, எங்களை அழிவின் கொடுங்கரங்களிலிருந்து மீளவிடமாட்டேனென்கிறது''’என குற்றம்சாட்டுகிறார்கள் கிராம மக்கள்.
யார் சொல்வது நிஜம்?
கடும் பாதிப்புகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகிவரும் தங்களின் பெயர், அடையாளங்களை வெளியிடவேண்டாமென தயங்கிய மீளவிட்டான் கிராமத்தினர் பேசத்தொடங்கினர். ""ஸ்டெர்லைட் ஆலைக்காக 1990 முதலே எங்கள் ஊரின் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. ஆசைகாட்டியும் வற்புறுத்தியும் சுமார் 350 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நில கையகப்படுத்தலுக்கான இழப்பீடைப் பெறவே ரொம்பவும் போராட வேண்டியிருந்தது. 2010-ல்தான் இழப்பீடு கிடைத்தது. அப்போதும் ஏக்கருக்கு 2 லட்சம்தான் கிடைத்தது. அதன் அப்போதைய மதிப்பு ஏக்கருக்கு 1.5 கோடி.
பருத்தி, எள், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, உளுந்து என தானியங்கள் விளைந்த மண்ணில் நெருஞ்சி மட்டும்தான் இன்று விளைந்து நிற்கிறது. இதனால் இப்பகுதியில் விவசாயம் கைவிட்டுப்போனதுமல்லாமல், விவசாயம் செய்து சுயமாக வாழ்ந்துவந்தவர்கள் கூலிகளாக மாறும் சூழல் உருவானது.
இனி இங்கே நம்ம வாழ்க்கையில்லை என நினைத்து நிறைய குடும்பங்கள் வெளியேறின. அப்படி மனதைரியத்தோடு வெளியேறியவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பிறந்த இடத்தைவிட்டு எப்படிப் போறதுனு தயங்கித் தயங்கி இங்கேயே தங்கினவங்க நடைப்பிணமா வாழறோம்''’என்கிறார்கள். 400 குடும்பங்கள் இருந்த ஊரில், இன்றைக்கு 150 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.
“பறிபோனது விவசாயம் மட்டும்தானா? கால்நடை வளர்ப்பும் இங்கு கேள்விக்குறி ஆகியிருக்கிறது. ""அவ்வப்போது ஆலை நிர்வாகத்தால் வெளியிடப்படும் அமிலக் கழிவுகளால் நீர்நிலை மற்றும் நிலங்கள் மாசுபட்டு கால்நடைகளுக்கு உடம்பில் காயங்களும் சமயங்களில் உயிரிழப்பும் நேர்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி மதில் சுவர் எழுப்பியிருப்பதால், எங்கள் ஊர் கிட்டத்தட்ட மதில்களுக்கு நடுவே அடைபட்டுக் கிடக்கிறது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் பிரபல நாளிதழ்களில் தங்களின் முன்னெடுப்புகளால் கடந்த பத்தாண்டுகளில் மழையளவு அதிகரித்துள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. மழைப்பொழிவு அதிகரித்திருக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிரபரணியில் உறிஞ்சும் நீர் போதாமல் ஏரல், உமரிக்காடு, வாழவல்லான், தென்திருப்பேரை போன்ற இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி டேங்கர் லாரிகளில் எடுத்துச்சென்று ஆலைக்குப் பயன்படுத்தியது ஏன்’’ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
ஆலை தொடங்கும்போது, சுற்றியுள்ள கிராமங்களில் எதிர்ப்பு எழுந்தபோது, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஸ்டெர்லைட் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என நிர்வாகம் வாக்குறுதியளித்தது. ஆனால், ஆலை அமைந்தபின்பு அந்த வாக்குறுதியையும் காற்றில்விட்டுவிட்டது. “இப்போதுவரை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்குமட்டுமே வேலை வழங்கியுள்ளது. அதிலும் ஒருவர் ஆலைக்குள் நடந்த விபத்தில் உயிரிழந்து போய்விட்டார்.
பல்வேறு காரணங்களைக் கூறி பெரும்பாலானவர்களின் விண்ணப்பங்களை தகுதியற்றவர்கள் என நிராகரித்துவிட்டது. நிலம் கையகப்படுத்தும்போது விவசாய நிலம், விவசாயம் செய்ய தகுதியற்ற நிலம் என வகைபிரித்தா எடுத்துக்கொண்டார்கள். ஆனால் வேலைவாய்ப்பு என வரும்போது மட்டும் தகுந்த பட்டப்படிப்பு இருந்தும், வேறெதேதோ தகுதிக் காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறார்கள். இது என்ன நியாயம்?''’என்கிறார்கள்.
ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்குபெற்ற ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரியிடம், "அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நச்சுவாயுக்கள் வெளியிடப்படுகின்றன' என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு "சிலசமயங்களில் இதுபோன்று நடந்திருக்கலாம்' என சமாளித்தார்.
இதனை பொறுப்பற்ற பதில் என்கிறார்கள் கிராமத்தினர். “""பெரும்பாலான நேரம் ஆலைப்புகை இரவு ஒன்பது மணிக்குமேல் அதிகாலைவரை வெளியிடப்படுகிறது. அந்த நச்சுவாயு வெளியேறுகிற ‘சில சமயங்கள்’ நடுச்சாமமாக இருந்தால், எப்படி ஊர்மக்களுக்குத் தெரியும்? தூக்கத்திலே உயிரைவிடவேண்டியதுதானா? இப்போதே சுற்றுவட்டார மக்கள் எத்தனையோ பிரச்சினைகளுடன் தாக்குப்பிடித்து வாழ்கிறோம். ஆலை விரிவாக்கம் நடந்தால் ஒட்டுமொத்த தூத்துக்குடி நகருக்கே கண்ணீர் அஞ்சலி செலுத்தவேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை''’என கொதிக்கிறார்கள்.
ஸ்டெர்லைட், தாமிரத்தை உருக்கினால் பரவாயில்லை. மக்கள் உயிரையும் உருக்கியெடுக்கிறார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள் மீளவிட்டான் கிராமத்தினர்.
-தொகுப்பு : க.சுப்பிரமணி