ADVERTISEMENT

நிர்க்கதியான மாரியம்மாளின் குடும்பம்... தவிக்கும் மகள்கள்...

05:36 PM Jul 24, 2019 | kalaimohan

நெல்லை கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வந்தார். கணவர் முருகசந்திரன், பணிப்பெண் மாரி ஆகியோருடன் அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை‌ செய்துவிட்டு தப்பிச் சென்றனர். மூவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்தக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பதாக அப்பகுதி மக்கள் கண்ணீருடன் வருத்தம் தெரிவித்துள்ளனர். மாரியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய மூவரும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12, 10, 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பே கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் மாரியம்மாள்தான், தன் பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.


வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு ஓய்வின்றி பல வீடுகளின் பணிப்பெண்ணாக மாரியம்மாள் உழைத்ததாகவும், தான் படிக்காத படிப்பை தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்றும் அவர் விரும்பியதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். மூன்று பெண் பிள்ளைகளின் கல்விக்காக உழைத்துக்கொண்டே இருந்த மாரியம்மாள் இன்று இல்லை என்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களுடைய தாயும் இறந்துவிட்ட நிலையில் எதிர்காலம் குறித்த பல கேள்விகளுடன் செய்வதறியாது 3 பெண் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மகளை இழந்த சோகத்தில் நிற்கதியாய் இருக்கிறார் மாரியம்மாளின் வயதான தாய்.

மாரியம்மாளின் குடும்பமே இன்று தனித்து விடப்பட்டுள்ளதாகவும் கல்வியில் சிறந்து விளங்கும் 3 பெண் குழந்தைகளுக்கும் தமிழக அரசு உதவி செய்து மேற்கொண்டு படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்களும், மாரியம்மாளின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT