ADVERTISEMENT

நீட்: 7.5% உள் இட ஒதுக்கீடு.. தொடர்ந்து சாதிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்.. குவியும் பாராட்டுகள்!

11:46 PM Jun 15, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

7.5% உள் இட ஒதுக்கீடு காரணமாக நீட் தேர்வில் தொடர்ந்து சாதிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிப்பது கனவாகவே போனது. அதன் பிறகு தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் இட ஒதுக்கீடு கிராமப்புற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒரு அரசுப் பள்ளி தொடர்ந்து 4வது ஆண்டாக சாதித்துள்ளது.

சில வருடங்களாகவே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அந்த அரசுப்பள்ளி.. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தான் என்பதில் பெருமையாக உள்ளது. இந்தப் பள்ளி தொடங்கிய காலத்திலிருந்து மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கட் ஆப் மதிப்பெண்ணில் தகுதி பெற்று பல மாணவிகள் இன்று மருத்துவர்களாக பணியில் உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பல துறை அலுவலர்களாக உள்ளனர். இந்த நிலையில் தான் நீட் வந்ததால் +2வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் கூட கிராமப்புற மாணவிகளால் அதனை எதிர்கொண்டு மருத்துவம் படிக்க முடியாமல் போனது. பல மாணவிகளின் கனவு நிறைவேறாமலேயே போனது.

இந்த நிலையில் தான் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்த முதல் ஆண்டிலேயே கீரமங்கலத்தில் இருந்து 1 மாணவன், 4 மாணவிகளுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு 7 மாணவிகளும் கடந்த ஆண்டு ஒரு மாணவியும் என கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவிகள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் இந்த ஆண்டில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுருதி 457 மதிப்பெண்களும், ஜனனி 418 மதிப்பெண்களும், சுபதாரணி 375, சுவேதா 348, ஸ்ரீரஞ்சிதா 322, சங்கவி 319 மதிப்பெண்கள் என 300 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவிகள் பெற்றுள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் 225 மதிப்பெண்களுக்கு மேல் 300 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளைப் பார்த்து பள்ளி மாணவிகளை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், எஸ்.எம்.சி நிர்வாகிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதே போல கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் மனோஜ் 339 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் வழக்கம் போல இந்த ஆண்டும் கீரமங்கலம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமானோருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சாதிக்கும் மாணவ, மாணவிகளை பாராட்டுவோம். மேலும் இந்த கிராமப்புற மாணவ, மாணவிகள் நடப்பு ஆண்டிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற பள்ளியிலேயே பாட வகுப்புகளை மாற்றி அமைத்தால் ஏழை மாணவ, மாணவிகள் தனியார் பயிற்சி மையங்களுக்கு வட்டிக்கு கடன் வாங்கி செல்லும் நிலையை மாற்றலாம் என்கின்றனர் பெற்றோர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT