ADVERTISEMENT

சினிமா போல் பரபரப்பு சம்பவம்... சிறுமி கடத்தல்... பணம் கேட்டு மிரட்டல்... முழு விவரம்! 

10:29 AM May 03, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடன் கொடுத்தவர் அவமானப்படுத்தியதால் பழிவாங்கும் நோக்கில் அவருடைய மகளை கடத்திய மர்ம நபர்கள்; 50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்தது; காவல்துறைக்கு பயந்து சிறுமியை விடுவித்தது; கடத்தல்காரர்களை காவல்துறை கைது செய்தது என சினிமாபோல் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் நாமக்கல் அருகே அரங்கேறியுள்ளன.


நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள காளிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுடைய 10 வயது மகள், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறான். வேலை காரணமாக சரவணன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இதனால் கவுசல்யாவும், குழந்தைகளும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.


ஏப். 30ம் தேதி இரவு, புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் மொட்டை மாடியில் மூன்று பேரும் தூங்கச் சென்றனர். சிறிது நேரத்தில் மூவரும் அயர்ந்து தூங்கி விட்டனர். நள்ளிரவு கடந்த நேரத்தில் குரங்கு குல்லா அணிந்த மர்ம நபர்கள் இருவர், மொட்டை மாடிக்கு வந்துள்ளனர். தாயையும், மகனையும் சரமாரியாக தாக்கியதோடு, இருவரையும் கட்டிலோடு பிணைத்துக் கட்டிப்போட்டுவிட்டு, சிறுமியை மட்டும் கடத்திச்சென்றனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சல் போட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடம் விரைந்தனர். கட்டிலில் கட்டிப்போடப்பட்டு இருந்த கவுசல்யாவையும், மகனையும் விடுவித்தனர்.


இதுகுறித்து கவுசல்யா எருமைப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதற்குள் இந்தச் சம்பவம் குறித்து வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி, டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் நேரடியாக களமிறங்கி விசாரணையை தீவிரப்படுத்தினர். மே 1ம் தேதி காலை 10 மணியளவில் கவுசல்யாவின் செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர், மகளை விடுவிக்க வேண்டுமானால் உடனடியாக 50 லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். செல்போன் அழைப்பை வைத்து மர்ம நபர் பேசிய டவர் சிக்னல் குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையே, எருமைப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே திங்கள்கிழமை (மே 2) காலை 6.30 மணியளவில் ஒரு கார் வந்து நின்றது.


காரில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் காரில் இருந்து சிறுமி ஒருவரை இறக்கிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இதை அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சிலர் பார்த்து, சந்தேகத்தின்பேரில் காரில் வந்தவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள்தான் சிறுமியை கடத்தியவர்கள் என்பதும், அவளைத்தான் காரில் இருந்து இறக்கி விட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

மேலும், காரில் வந்தவர்கள் காளிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (30), அவருடைய மனைவி பொன்னுமணி (27) என்பதும் தெரியவந்தது. இந்த தம்பதியினர் சிறுமியின் தந்தையிடம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் அசலும், வட்டியும் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் சரவணன், அவர்களிடம் பணத்தைக் கேட்டு அடிக்கடி குடைச்சல் கொடுத்து வந்துள்ளார்.


இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு தம்பதியினர் இருவரும், சரவணன் வீட்டுக்குச் சென்று அவர்கள் வாங்கிய பணத்தைக் கொடுத்துள்ளனர். அப்போது கவுசல்யா, அவர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் அவமானம் அடைந்த மணிகண்டனும், பொன்னுமணியும் பழி வாங்கும் நோக்கத்தில் சிறுமியை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது.


ஒரு கட்டத்தில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் விசுவரூபம் எடுத்திருப்பதும், காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதை அறிந்ததாலும் அச்சம் அடைந்த அவர்கள், சிறுமியை பெட்ரோல் பங்க் அருகே விடுவித்துவிட்டு வெளியூர் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்ததையும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து மணிகண்டன், பொன்னுமணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுமி, 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT