ADVERTISEMENT

"மூட்டை மூட்டையாய்..." கஞ்சா வேட்டையில் நாமக்கல் போலீஸ் சாதனை..! 

06:27 PM Sep 29, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாராளமாக இறக்குமதியாகிறது. இதைக் கண்காணித்து தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளோ உள்ளுர் அரசியல்வாதிகள் நிர்பந்தத்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். ஆனால், எல்லோரையும் போல் இல்லாமல் அதிரடியாகக் களமிறங்கி துரித நடவடிக்கை எடுக்கும் போலீஸ் அதிகாரிகளும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வரிசைக்கு உதாரணமாக சினிமா பாணியில் நாமக்கல் போலீஸ் சேசிங் செய்து சுற்றி வளைத்து ஒரே நாளில் 180 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றியுள்ளார்கள்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இளம் எஸ்.பி சக்தி கணேசன் பொறுப்பேற்று இரண்டு மாதம்தான் ஆகிறது. இங்கு நடக்கும் குற்றச் செயல்களுக்கு தொடர்ந்து கடிவாளம் போட்டு அடக்கி வருகிறார் சக்தி கணேசன். சென்ற இரண்டு மாதங்களில் 18 கஞ்சா வியாபாரிகள் மாவட்டம் முழுக்க கைது செய்யப்பட்டு, சுமார் 80 இலட்சம் மதிப்புள்ள 800 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

எஸ்.பி.யின் நேரடி கண்காணிப்பில் உள்ள தனிப்படையினர் கடந்த 17.07.2020-ம் தேதி புவனேஸ்வரி என்பவரிடமிருந்து சுமார் 9½ கிலோ கஞ்சாவும், 19.07.2020-ம் தேதி மாயாண்டி (எ) மாதவன், தமிழரசி இருவரிடமும் சுமார் 10 கிலோ கஞ்சாவும், 20.07.2020-ம் தேதி பேபி என்பவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவும், 21.07.2020-ம் தேதி குமரேசன், இளம்பரிதி மற்றும் மஞ்சுளா ஆகியோரிடமிருந்து சுமார் 44 கிலோ கஞ்சாவும், 25.07.2020-ம் தேதி கமலாதேவி என்பவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவும், 29.07.2020-ம் தேதி கோகிலா மற்றும் நதியா ஆகியோரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவும், 29.07.2020-ம் தேதி அருள்மணி மற்றும் ரேவதி ஆகியோரிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சாவும், 25.08.2020-ம் தேதி பழனி மற்றும் ராஜ்குமார் ஆகியோரிடமிருந்து 300 கிலோ கஞ்சாவும், 29.09.2020-ம் தேதி கிருஷ்ணபெருமாள், குமார் மற்றும் பாலையா ஆகியோரிடமிருந்து 210 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட கஞ்சா வியாபாரிகளும் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாகவே 29.09.2020-ம் தேதி எஸ்.பி. சக்தி கணேசனுக்கு வந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி மற்றும் காவலர்கள் தினோ மற்றும் ராம்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ரகசியமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஆரோக்கியதாஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிப்காட் அருகே 'TN 39 VR 7430' என்ற FORD காரை தனிப்படை போலீசார் துரத்திச் சென்று சுற்றி வளைத்து மறித்தனர். பிறகு சோதனை செய்ததில் அந்தக் காரில் 180 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 18 லட்சம் இருக்கும். அதைக் கைப்பற்றியும், அந்த காரை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் ஆரோக்கியதாஸ் என்பவரையும் கைது செய்து கைப்பற்றப்பட்ட அந்த கஞ்சாவுடன் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொடர் கஞ்சா வேட்டையில் சுமார் ரூபாய் 80 இலட்சம் மதிப்புள்ள சுமார் 800 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், IPS நம்மிடம் கூறினார்.

இரண்டு மாதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 800 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது என்றால் தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரம் கிலோ கஞ்சா இல்லாமல் இருக்காது. இந்த ஒரு மாவட்ட போலீஸ் போல் மற்ற மாவட்ட போலீசும் நடவடிக்கை எடுக்கும் என யாரும் நம்புவதற்கு, வாய்ப்பே இல்லை...!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT