ADVERTISEMENT

திருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை!

02:38 PM Feb 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் அருகே, திருமணமான பெண்ணுடன் 21 வயது இளைஞர் ஓட்டம் பிடித்ததால் அவமானம் தாங்காமல் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியை சேர்ந்தவர் சுப்ரமணி (57). இவருக்கு சங்கர் (25), கிருஷ்ணன் (21) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் குழந்தைகளாக இருந்தபோதே சுப்ரமணியின் மனைவி இறந்து விட்டார்.

இந்நிலையில் சுப்ரமணி, சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டியில் மகன்களுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இதே சூளையில், சேலத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரும் அவருடைய மனைவி சத்யாவும் வேலை செய்து வந்தனர்.

சுப்ரமணியை காண்பதற்காக அடிக்கடி செங்கல் சூளைக்கு அவருடைய இரண்டாவது மகன் கிருஷ்ணன் சென்று வந்தார். இதில், சூளையில் வேலை செய்து வந்த சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்குள் நட்பு இறுகி, நாளடையில் நெருக்கமான தொடர்பாக மாறியது.

இதையறிந்த பாஸ்கர், இதுபற்றி சுப்ரமணியிடம் சொல்லி மகனை கண்டித்து வைக்கும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணனும், சத்யாவும் பிப். 26ம் தேதி திடீரென்று தலைமறைவாயினர்.

இருவரையும் பல இடங்களில் தேடியும் தகவல்கள் இல்லை. இதுகுறித்து பாஸ்கர் சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர், சுப்ரமணி மற்றும் அவருடைய மூத்த மகனிடம் வீட்டிற்கே சென்று நேரில் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், செங்கல் சூளை அருகே உள்ள ஒரு மரத்தில் சுப்ரமணியும், சங்கரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை (பிப். 27) காலையில் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடம் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றினர். உடற்கூராய்வுக்காக சடலங்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணமான பெண்ணுடன் மகன் ஓட்டம் பிடித்ததாலும், வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதாலும் அவமானம் தாங்காமல் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT