ADVERTISEMENT

ஆன்லைன் ஆப்பில் கடன்; மாணவருக்கு நேர்ந்த சோகம்

06:16 PM Jun 08, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடித்து விட்டு இறுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்துள்ளார். இவர் ஆன்லைன் செயலி மூலம் தன்னுடைய பணத்தேவைக்காக 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரியாமல் அவர் கடன் வாங்கிய நிலையில் தன்னிச்சையாக அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியும் சமீபத்தில் முடிந்துள்ளது.

இதையடுத்து கடன் கொடுத்த நிறுவனம் பணத்தைத் திருப்பிக் கேட்டு லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளது. இதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடன் கொடுத்த நிறுவனம் லோகேஷ்வரனின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர் கடன் வாங்கிய விவரங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், பணத்தை திருப்பிச் செலுத்தவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் தான் தனது மகன் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் கடன் வாங்கியது பற்றி தனது பெற்றோருக்கு தெரிய வந்ததை அறிந்த லோகேஷ்வரன் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து தனியாக வீட்டில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT