ADVERTISEMENT

வேலை கிடைக்காத விரக்தியில் அத்தையை வெட்டிக்கொன்ற ஆசிரிய பட்டதாரி! மேலும் இருவரையும் வெட்டினார்!!

10:08 AM Aug 09, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


நாமக்கல் அருகே, முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தும் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த வாலிபர், அத்தையை கொடுவாளால் வெட்டிக் கொன்றார். பக்கத்து வீட்டில் இருந்த பெரியப்பா, உள்ளூர்க்காரர் ஒருவரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பாலப்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை. கூலித்தொழிலாளி. இவர்களுடைய மகன் கோடீஸ்வரன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கோடீஸ்வரன், ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் எம்.எஸ்சி., பி.எட்., படித்துள்ளார். ஆனால் அரசு ஆசிரியர் பணிக்காக முயற்சித்தும் வேலை கிடைக்காததால், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தார். இதற்கிடையே, நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் அரசு வேலை பெற்றுத்தருவதாகவும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியதை நம்பி, அவரிடம் 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

கோடீஸ்வரனும், பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லித்தான் மேற்சொன்ன தொகையை வசூலித்துள்ளார். இவரிடம் பணத்தை பெற்றுச்சென்ற நபர், சொன்னபடி அரசு வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். ஆனால், கோடீஸ்வரனிடம் பணம் கொடுத்த நபர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடீஸ்வரன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கோடீஸ்வரன் வீட்டுக்குச்சென்று, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோடீஸ்வரன், காவலர்களை தாக்க முயற்சித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தது. பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், தொடர்ந்து யாரிடமும் பேசாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை (ஆக. 7) வீட்டில் தனியாக இருந்த கோடீஸ்வரன், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அத்தை லட்சுமியை (65) கொடுவாளால் திடீரென்று சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அருகில் இருந்த தனது பெரியப்பா பெரியண்ணன் (70), வீட்டிற்குள் நுழைந்த அவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெரியப்பாவையும் வெட்டியுள்ளார். அப்போதும் ஆத்திரம் தணியாத கோடீஸ்வரன், வீட்டை விட்டு வெளியே வந்தார். உள்ளூரைச் சேர்ந்த நரேஷ்குமார் (30) என்பவர் அந்த வழியாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவரையும் கொடுவாளால் வெட்டினார். அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன்பிறகு எதுவுமே நடக்காததுபோல், தன் வீட்டுக்குள் சென்று உள்பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டார் கோடீஸ்வரன்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெரியண்ணன், நரேஷ்குமார் ஆகிய இருவரையும் மீட்ட ஊர்க்காரர்கள், அவர்களை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த புதுச்சத்திரம் காவல்துறையினர், லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வீட்டுக்குள் பதுங்கி இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர். கதவை தட்டியும் அவர் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடீஸ்வரனின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்த பிறகே, அவரை கைது செய்தனர். காவல்துறையினர் வீட்டுக்குள் ஒரு மூலையில் இருட்டுக்குள் உட்கார்ந்து இருந்துள்ளார்.

கைதான கோடீஸ்வரன் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''அரசாங்க வேலை வாங்கிக் தருவதாக பலரிடம் பணம் வசூலித்தேன். அந்தப் பணத்தை எனக்குத் தெரிந்த ஒருவர் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னதால் அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் கேட்டபோதும், தரமுடியாது என்று சொல்லி விட்டார். இதை அறிந்த அத்தை, எனக்கு அடிக்கடி புத்திமதி சொல்லிக்கொண்டே இருந்தார்.

விரக்தியில் இருந்த எனக்கு அவர் அட்வைஸ் செய்தது பிடிக்காததால் அவரை வெட்டிக்கொன்றேன். பக்கத்தில் இருந்ததால் பெரியப்பாவையும், என்னை பிடிக்க வந்தார் என நினைத்து நரேஷ்குமாரையும் வெட்டினேன்,'' என்று கூறியுள்ளார். விசாரணையின்போது கோடீஸ்வரன் பலமுறை புத்தி பேதலித்தது போல் முன்னுக்குப் பின் முரணாகவும், சம்பந்தம் இல்லாமல் பேசியதாகவும் காவல்துறையினர் கூறினர்.

இந்த சம்பவம் புதுச்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT