ADVERTISEMENT

நக்கீரன் இணையதளம் செய்தி எதிரொலி -  தகவல் வழங்கியது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

06:18 PM Jul 04, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி தகவல் அளிக்கவில்லை – மாநிலத் தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு – சிக்கலில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்னும் நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம் (29.06.2018) அதன் எதிரொலியாக – தகவல் வழங்கியுள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

ADVERTISEMENT

திருச்சி பொன்மலையை அடுத்த கீழ கல்கண்டார் கோட்டையைச் சார்ந்தவர் செல்வக்குமார். இவர் மறுமலர்ச்சி திமுகவின் கிளைச் செயலராக உள்ளார். இவர் திருச்சியில் சிறுபான்மையினர் உரிமை பெற்று அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் நியமனம் செய்யப்பட்ட முதல்வர் பணிக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் கல்வித் தகுதி (Qualification Approval) வழங்கியுள்ளதா? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் கேட்டு 14.05.2018ஆம் நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தகவல் வழங்கும் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மடல் பெற்ற 30 நாட்களுக்குள் பதில் வழங்கவேண்டும் என்று விதியுள்ளது. அதன்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தகவல் வழங்கும் அலுவலர் 15.06.2018க்குள் தகவல் வழங்கியிருக்கவேண்டும். பல்கலைக்கழகம் தகவல் வழங்கவில்லை. 30 நாள்கள் கடந்தும் தகவல் வழங்கப்படவில்லை என்று செல்வக்குமார் தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு அலுவலர் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு 19.06.2018ஆம் நாளிட்ட கடிதம் வழி மேல்முறையீடு செய்தார்.

இந்த கடிதத்தை பல்கலைக்கழகம் 20.06.2018ஆம் பெற்றுள்ளது. ஒருவாரம் அதாவது 27.06.2018ஆம் நாள் வரை மேல்முறையீட்டின் அடிப்படையிலும் பல்கலைக்கழகம் கல்லூரி முதல்வருக்குக் கல்வித் தகுதி ஏற்பு வழங்கப்பட்ட தகவலைத் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, செல்வக்குமார் 27.06.2018ஆம் நாளிட்ட கடிதம் மூலம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் நான் கேட்ட தகவலை வழங்கவில்லை என்றும் பதிவாளருக்கு மேல்முறையீடு செய்தும் தகவல் வழங்கப்படாத நிலையே நீடித்து வருகின்றது என்றும் இது 30 நாள்களுக்குள் தகவல் வழங்கப்படவேண்டும் என்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறிய செயலாக உள்ளது என்று சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையருக்குப் புகார் செய்தார்.

இந்தச் செய்தி நக்கீரன் இணையத்தில் இல் 29.6.2018ஆம் நாள் சிக்கலில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்னும் தலைப்பில் செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 02.07.2018 நாளிட்ட ந.க.எண்.028.FAA/RTI/2018 மடல் வழி கீழக் கல்கண்டார்கோட்டை செல்வக்குமாருக்குத் தகவல் வழங்கியுள்ளது. இந்த தகவல் 04.07.2018ஆம் நாள் தன்னால் பெறப்பட்டது என்று செல்வக்குமார் நம்மிடம் தெரிவித்தார்.

நக்கீரன் இணைய செய்தியால் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தரவேண்டிய தகவலை காலம் தாழ்த்தினாலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தகவல் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT