ADVERTISEMENT

நக்கீரன் ஆசிரியர் வழக்கு தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி வாதம் செய்த என்.ஆர். இளங்கோ

09:58 PM Jun 22, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு இன்று நீதிபதி நிஷா பானு மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்றக் காவலாகக் கருதக் கூடாது என அமலாக்கப் பிரிவு தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவையும் அமர்வு நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்து அமலாக்கப்பிரிவு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது எனக் கூறி செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதத்தைத் தொடங்கினார். பின்னர் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை நீதிபதிகளுக்கு வாசித்துக் காண்பித்தார். செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனச் சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும் வாதிட்டார். வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கப் பிரிவு தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும் என அமலாக்கப்பிரிவு தரப்பில் சொலிஸிட்டர் துஷார் மேத்தா தெரிவித்தார். அதேபோல் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது எனத் தங்கள் தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

சட்டப்பூர்வ கைதாக இருந்தால் ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது என்றும் அதற்குக் காரணம் மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும் என்று என்.ஆர். இளங்கோ வாதிட்டார். அப்போது வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை என்றும் அதை அரசியல் சாசனத்தின் 15 ஏ பிரிவில் அம்பேத்கர் சேர்த்திருக்கிறார் என்றும் அவர் வாதிட்டார். எனவே நீதிமன்றக் காவலில் வைத்துப் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றக் காவல் முழுமையாகச் சட்ட விரோதமாகவோ, இயந்திரத்தனமாகவோ இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும் விசாரணைக்கு ஏற்கக் கூடியது என்றும் வாதிட்டார். செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் ஆனால் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதன்மை அமர்வு நீதிபதி அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்றக் காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த எங்கள் தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 13 ஆம் தேதி இரவு நடந்த அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் ஆனால் இந்த பிரிவு தங்களுக்குப் பொருந்தாது என அமலாக்கப் பிரிவு தரப்பில் வாதிடப்படுவதாக அவர் கூறினார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவு, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்குக்குப் பொருந்தாது என அமலாக்கப்பிரிவு கூற முடியாது என்றும் அந்த பிரிவை அமலாக்கப் பிரிவு பின்பற்ற வேண்டும் என்றும் குற்ற விசாரணை முறைச் சட்டபிரிவைப் பின்பற்றாதது அடிப்படை உரிமையை மீறியது என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்று அவர் வாதிட்டார். உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்துள்ளது அமலாக்கப் பிரிவு என்று என்.ஆர். இளங்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அமலாக்கப் பிரிவு தரப்பு சொலிஸிட்டர் துஷார் மேத்தா, வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வேண்டுமானால் உள்நோக்கம் என்ற காரணத்தைக் குறிப்பிடலாம். ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என்று தெரிவித்தார். இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை எதிர்த்த வழக்கில், வேலை வாங்கித் தருவதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சம்மனை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. ஆட்கொணர்வு மனுவுக்கு அப்பால் வாதங்களை முன் வைக்க முடியாது என்று துஷார் மேத்தா தெரிவித்ததற்கு அமலாக்கப் பிரிவின் ஆட்சேபத்தைக் கவனத்தில் கொள்வதாக நீதிபதிகள் பதில் தெரிவித்தனர். 2014 - 15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் அதன் பிறகே செந்தில் பாலாஜிக்கு அமலாக்கப் பிரிவு ஐந்து முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி செந்தில் பாலாஜி சார்பில் ஆடிட்டர் நான்கு முறை ஆஜராகி விளக்கமளித்தார். அதன் பின் ஒரு நாள் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார் என்றும் என்.ஆர். இளங்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை மீறி காவலில் வைத்து விசாரிக்கக் கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், ஜூன் 14 அதிகாலை செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருதி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கப் பிரிவு தான். பின்னர் அவருக்குப் போலியான அறுவை சிகிச்சை என எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார். அறுவை சிகிச்சைக்குப் பின் அவரை விசாரிப்பது முறையல்ல என அமலாக்கப் பிரிவு முடிவுக்கு வந்ததற்கு நன்றி. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட முதல் 15 நாட்களுக்குப் பிறகு காவலில் வைத்து விசாரிக்க எந்த காரணத்துக்கும் அது சுனாமியாக இருந்தாலும் சரி, கரோனாவாக இருந்தாலும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சட்ட விரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு காவல்துறையினரின் அதிகாரம் வழங்கப்படவில்லை அதனால் அமலாக்கப் பிரிவு எப்படி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர முடியும் என்றும் சுங்கத்துறை, ஜி.எஸ்.டி. வரித்துறை அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால் அமலாக்கப் பிரிவுக்கு காவலில் வைத்து விசாரிக்க சட்ட விரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒருவரை விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு 24 மணி நேர அவகாசம் மட்டுமே உள்ளது. அதை அமலாக்கப் பிரிவு பயன்படுத்தியுள்ளதாகவும் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார். கைதின் போது சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை. முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவிடும் போது மனதை செலுத்தவில்லை என்றும் இயந்திரத்தனமாக நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவிட்டுள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் மேலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அதிகாரமில்லை என்றும் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்றக் காவல் காலத்துடன் சேர்க்கக்கூடாது என்ற அமலாக்கப் பிரிவு கோரிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் என்.ஆர். இளங்கோ கேட்டுக் கொண்டு வாதத்தை நிறைவு செய்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT