ADVERTISEMENT

எனக்காக அண்ணன் படிப்பை துறந்தார்.. இன்று நான் தங்கம் வென்றேன்... தங்க மங்கை அனுராதா!

10:20 AM Jul 19, 2019 | kalaimohan

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் அனுராதா. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். காவல்நிலையத்தில் பணி என்றாலும் பளுதூக்கி சாதிப்பதே லட்சியமாக கொண்டிருந்தார். இவர் கனவை நினைவாக்கும் விதமாக ஆஸ்திரேலியா சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் 'ஸ்னாச்' முறையில் 100 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோ என மொத்தம் 221 எடை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பளுதூக்கும் போட்டியில் தொடக்க காலத்தில் தமிழகத்தில் பயிற்சி பெற்ற அனுராதா, பின்னர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பு பயிற்சியை பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் புதுக்கோட்டை விளையாட்டு வீரர்கள் உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய அனுராதாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சார்பில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அனுராதாவை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வாழ்த்து கூறினார். பின்னர் திறந்தவெளி ஜீப்பில் ஊர்வலமாக சென்ற அனுராதாவிற்கு தெரு நடுவில் உள்ள மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் முதன் முதலில் அவர் பயிற்சி மேற்கொண்ட புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சென்று அங்கு பயின்று வரும் மாணவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தினார். பின்னர் தான் பயிற்சி பெற்ற கூடத்தில் பயிற்சி உபகரணங்களை தொட்டுத் தழுவி முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது..


பல தடைகளைத் தாண்டி தான் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சகோதரர் தனது கல்வியைத் துறந்தும் அம்மா கூலி வேலை செய்தும் தான் என் சாதனைக்கு வித்திட்டனர்.
மேலும் தமிழகத்தில் பின்தங்கிய கிராமங்களிலிருந்து வரும் பெண்கள் சாதிப்பது என்பது சவாலாகவே உள்ளது. பல தடைகளைத் தாண்டித்தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோன்ற சாதனை மேற்கொண்ட தடகள வீரா்கனை சாந்தி, கோமதி மாரிமுத்து பிரச்சனைக்கு உள்ளானது ஏன் என்று தெரியவில்லை.

நான் அடிப்படையான சாதாரண விளையாட்டு உபகரணங்களில் பயிற்சி எடுத்தே காமன்வெல்த்தில் தங்கம் வென்றேன். உலகத்தரம் வாய்ந்த உபகரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியமாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் விளையாட்டு துறையில் சில அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளது. உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் பல கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் என்னைப்போல் சாதிப்பார்கள். நான் பின்தங்கிய பகுதியில் இருந்து வந்ததால் வருங்காலங்களில் பின்தங்கிய கிராமப்புற மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன். பேருந்து வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் பிறந்து இந்த அளவிற்கு சாதனை படைத்ததற்கு தங்கள் கிராம மக்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்று அனுராதா கூறினார்.

பின்னர் அனுராதாவின் வெற்றிக்கு காரணமாக உள்ள அவரது சகோதரர் மாரிமுத்து பேசுகையில்:-
தனது தங்கை மிகுந்த சிரமத்திற்கு இடையில் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார் எங்கள் கிராமமே மகிழ்ச்சியாக உள்ளது, அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியமாகக் கொண்டு உள்ளார் அரசு அதற்கு தேவையான உதவிகளை செய்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார், மேலும் எங்கள் சொந்த ஊரான நெம்மேலிப்பட்டியில் அனுராதா பயிற்சி தொடக்கத்திலிருந்து இன்று வரை போதுமான அளவு பேருந்து வசதி கூட இல்லை. தங்கள் ஊருக்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் அனுராதா போன்று மேலும் பல பெண்கள் இதுபோன்ற சாதனைகளை புரிவார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தங்கள் பகுதியில் பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அவர் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT