ADVERTISEMENT

இசைக்கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிடில் பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடும்... –உயர் நீதிமன்றம் வேதனை!

04:01 PM Jul 21, 2020 | rajavel

ADVERTISEMENT

நடைமுறை சிக்கல்களைக் காரணம் காட்டி நாதஸ்வர, தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஊரடங்கின் காரணமாக நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும், உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனித நேய அடிப்படையில் குறைந்தபட்ச நிவாரணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்களை, தமிழக அரசு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், நலவாரியத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில்கள் மூடப்பட்டுள்ளதாலும், திருமண நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தினாலும் நாதஸ்வர, தவில் வித்வான்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நிலுவையில் உள்ள வேறொரு வழக்கை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏற்கனவே நலிந்த கலைஞர்களாக கருதப்படும் இவர்கள், இந்த பேரிடர் காலத்தில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும், நடைமுறை சிக்கல்களை மட்டுமே காரணம் காட்டி இதுபோன்ற நலிந்த கலைஞர்களான நாதஸ்வர, தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என வேதனை தெரிவித்தனர். பின்னர், அரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்திற்காக, விசாரணையை ஜூலை 28 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT