ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

01:07 PM Apr 22, 2024 | prabukumar@nak…

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT