ADVERTISEMENT

வீடு இடிந்து விழுந்து தாய் கர்ப்பிணி மகள் பரிதாப பலி! நேரில் சென்ற அமைச்சர்! 

04:49 PM May 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். விளிம்புநிலை வாசியான இவர், தூத்துக்குடியின் மாநகராட்சி கழிவறையில் டோக்கன் கொடுக்கிற வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள் (45). இவர்களது மகள் கார்த்திகா (21). இவருக்கும் விளாத்திகுளம் அருகிலுள்ள மார்த்தாண்டம் பட்டியைச் நேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது கார்த்திகா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அண்மையில் கார்த்திகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த பின்பு பிரசவத்திற்காக தாய் வீடு அழைத்து கொண்டு வந்திருக்கிறார்கள்.


தூத்துக்குடியில் முத்துராமன் வசித்து வந்த வீடு 50 ஆண்டுகால பழமையானது. பழங்கால முறைப்படி பனங்கட்டைகளில் மேல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு பெய்த தொடர்மழை காரணமாக வீட்டின் மேற் கூரை சேதமடைந்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவு அந்த அறையில், முத்துராமன் அவரது மனைவி காளியம்மாள் மகள் கார்த்திகா மூவரும் தூங்கியுள்ளனர். முத்துராமனின் தாய் காத்தம்மாள் வீட்டின் வெளிப்பகுதியில் தூங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் முத்துராமன் வேலைக்குச் செல்வதற்காக ஏழுந்த போது, மேற் கூரையின் மணல் விழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அடுத்த நொடி வீட்டின் மேற் கூரை மொத்தமாக சரிந்து வீட்டின் உள் பகுதியில் விழுந்திருக்கிறது. இதில் உறங்கிக் கொண்டிருந்த காளியம்மாள் அவர் மகள் நிறை மாத கர்ப்பிணியான கார்த்திகா, முத்துராமன் ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு பதறிய, முத்துராமனின் தாய் காத்தம்மாள் அருகிலுள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்க, தொடர்ந்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பொது மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இடிபாடுகளில் சிக்கிய காளியம்மாள், அவரது மகள் நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். பீரோவின் அருகில் முத்துராமன் நின்றிருந்ததால் மேற், கூரை விழாமல் பீரோ தடுத்ததால் படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தகவலறிந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில் ராஜ், எஸ்.பி.பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதன் பின் சிகிச்சையிலிருந்த முத்துராமனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கீதாஜீவன் அவரிடம் தி.மு.க.சார்பில் 2 லட்சம் நிதி உதவியையும் வழங்கினார். வீடு இடிந்து விழுந்து தாய் நிறைமாத கர்ப்பிணி மகள் இருவரும் இறந்த சம்பவம் அண்ணா நகர் பகுதியை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT