ADVERTISEMENT

8 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை; கழுத்தை அறுத்துக் கொலை செய்த தாய் 

03:56 PM Jul 28, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சல்லக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜீவிதா(26). இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி கடந்த 8 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, ஜீவிதா கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்த நிலையில், அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மேலும், பிரசவத்திற்காக சல்லக்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த ஜீவிதா அங்கேயே தங்கியிருக்கிறார். இந்த நிலையில், வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் வருகிறது என்று நேற்று மாலை ஜீவிதா சத்தம் போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த ஜீவிதாவின் குடும்பத்தினர், குழந்தையைத் தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, குழந்தையின் கழுத்தில் இருந்த கொப்பளங்கள் வெடித்ததால் தான் குழந்தை இறந்தது என்று ஜீவிதா கூறியிருக்கிறார்.

ஆனால், ஜீவிதாவின் பேச்சில் சந்தேகம் அடைந்த அரசு மருத்துவர்கள், வாடிப்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த காவல்துறையினர், மருத்துவமனைக்குச் சென்று ஜீவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், வெயில் காலத்தில் ஏற்பட்ட வேனல் கட்டிகள், கொப்பளங்கள் போன்ற சரும நோய் இருந்ததால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால், குழந்தை தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், ஆத்திரம் அடைந்த ஜீவிதா குழந்தையின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்திருக்கிறார் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் ஜீவிதா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தையைத் தனது தாயே கொலை செய்த கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT