ADVERTISEMENT

வாக்காள மக்களின் ஓட்டுக்கு பணம்! ஆதரவும்!! எதிர்ப்பும்!!! தேர்தல் பண ஸ்டோரி

02:51 PM Feb 13, 2019 | sakthivel.m

பாராளுமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதத்தில் வர இருப்பதையொட்டி தமிழகத்தில் முதன் முதலாக ஆளுங்கட்சிதான் எம்.பி. சீட்டுக்கு போட்டி போடுபவர்களில் விருப்பமனுவை வாங்கி இருக்கிறார்கள். அதுபோல் எதிர் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு களமிறங்கி வருகிறார்கள். அதேபோல் வாக்காள மக்களும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள்.
ஆனால் இந்திய ஜனநாயக நாட்டில் மக்களின் ஒரே அதிகாரமான வாக்குரிமையை விலைபேசி விற்கப்பட்டு வருவது ஒவ்வொரு தேர்தலிலும் நடைமுறையாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் கடந்த 2014ல் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன்குமாரும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ரகசிய குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து இக்குழுவில் அரசியல் சார்பு இல்லாத தன்னார்வ தொண்டு இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். அவர்கள் வாக்காள மக்களுக்கு பணம் கொடுப்பதை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ ரகசியமாக எடுத்து அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும். இப்படி ஒரு நடைமுறையை நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்படும். இதற்கு வாக்காள மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி இருந்தது. ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல்வாதிகள் வழக்கம்போலவே வாக்காள மக்களுக்கு பணம் கொடுத்தனரே தவிர தேர்தல் ஆணையம் குழு மூலம் படமோ, வீடியோவோ எடுத்து அதை தடுக்க ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் ஆணைய உத்தரவும் காற்றில் பறந்தது. அந்தஅளவுக்கு அரசியல்வாதிகள் வாக்காள மக்களுக்கு பணம் கொடுத்தது தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலிலும், ஆளுங்கட்சியாக இருந்த ஜெ. அரசு வாக்காள மக்களுக்கு ஆயிரம், ஐநூறு என போட்டி போட்டுக் கொண்டு பணம் பட்டுவாடாசெய்தனர். அதை தலைமை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாததால்தான் ஜெ.வோ வாக்காள் மக்களுக்கு பணம் கொடுத்ததின் மூலம் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் பெயருக்கு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக கூறி இரண்டு தொகுதிகளின் தேர்தலை ரத்துசெய்தனர்.


அதன்பின் இரண்டு தொகுதிகளிலும் நடந்த தேர்தலில் பகிரங்கமாக ஆளுங்கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றனர். அதையும் தேர்தல் கமிசன் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சிக்கு துணை போய் வந்தனர். அதைவிட கொடுமை என்னவென்றால், ஆர்.கே. நகர் தொகுதியில் பகிரங்கமாகவே இரண்டாயிரம், மூவாயிரம் என வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். இதில் டிடிவி தினகரன் 20 ரூபாயை கொடுத்து 20ஆயிரம் தருகிறேன் என்று வெற்றி பெற்றார். இப்படி வாக்காள் மக்களை அரசியல்வாதிகள் பணத்தால் அடித்தே ஓட்டு வாங்கி வெற்றி பெற்று வருவது தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.


இந்தநிலையில் தான், வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வாக்காள மக்கள் தங்கள் ஓட்டுக்கு விலை போகிறார்களா? இல்லையா? என்பதை அறிய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பலதரப்பட்ட வாக்காள மக்களை சந்தித்து மனநிலையையும் நாடி பிடித்து பார்த்தோம்.

பாலன் (பெட்டிக்கடை, மேட்டுப்பட்டி)


ஊராட்சி அலுவலகத்திற்கும், யூனியன் அலுவலகத்திற்கும் போனால் எந்த ஒரு கையெழுத்துக்கும் நூறு ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டுதான் கையெழுத்த போடுகிறார்கள். அப்படியிருக்கும் போது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் அரசியல்வாதிகள் பணம் கொடுப்பதை எப்படிங்க வாங்காமல் இருக்க முடியும். அவங்க ஒன்னும் உழைத்த பணத்தை கொடுக்கலைங்க. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைத்தான் கொடுக்கிறார்கள். அதை வாங்குவது தப்பில்லை வரக்கூடிய தேர்தலுக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாங்கள் ரெடியாகத்தான் இருக்கிறோம் என்று கூறினார்.


லட்சுமி (குடும்பத் தலைவி, திண்டுக்கல்)


கவுன்சிலர் தேர்தலுக்கே அரசியல்வாதிகள் நூறு, இருநூறு என கொடுத்து வந்தவர்கள் வரக்கூடிய எம்.பி.தேர்தலுக்கு ஐநூறு, ஆயிரம் என கொடுப்பாங்க என்ற எதிர்பர்ப்பில் தான் இருக்கிறோம். ஆனால் தேர்தல் கமிசனோ பணம் வாங்கக்கூடாது என்கிறது. ஏற்கனவே பணம் கொடுத்து ஆசையை காட்டிவிட்டு இப்ப பணம் வாங்கக்கூடாது என்றால் எந்த விதத்தில் நியாயம். இதுலயும் வீடுதேடி வந்து கொடுக்கிற பணத்தை எப்படிங்க வாங்காமல் இருக்க முடியும் என்றார்.


பாஸ்கரன் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர், கொடைக்கானல்)


அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற மேலைநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவை தேர்தல் ஆணையமே ஏற்று நடத்திக் கொண்டு வேட்பாளர்களை ஓட்டு கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறது. அதுபோல் இங்கேயும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை தேர்தல் ஆணையமே ஏற்று நடத்தினால் தான் ஜனநாயகமுறைப்படி மக்களும், தங்கள் இஷ்டம் போல் வாக்களிப்பார்கள். அதன் மூலம் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியுமே தவிர வேட்பாளர்கள் தேர்தல் செலவை செய்யலாம் என்ற நடைமுறை இருக்கும் வரை வாக்காள மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதையும் தடுக்க முடியாது.


ஜெயபாலன் (கல்லூரி மாணவர், குழந்தைப்பட்டி)


அரசியல்வாதிகளிடம் பணம் வாங்காமல் இருந்தால்தான் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட முடியும். பணம் வாங்கினால் அவர்களுக்கு நாம் அடிமையாகி விடுவோம் அதனாலதான் ஓட்டை விற்கக்கூடாது என்று தேர்தல் கமிசன் சொல்வதை என்னைப் போல் உள்ள இளைய சமுதாயம் மனதார ஏற்றுக்கொண்டு ஓட்டுக்கு பணம் வாங்காமல் வரும் தேர்தலில் ஓட்டு போட முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

சின்னம்மாள் (இல்லத்தரசி, என்.ஜி.ஓ. காலனி)

பொங்கலுக்கு ரேசன் கடையில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதில் ஒரு கிலோ கறி ஐநூறு ரூபாய்க்கு வாங்கிட்டு, மீதி உள்ள பணத்தை பைனான்ஸ் கட்டினேன். அதுபோல் தேர்தலுக்கு பணம் கொடுப்பார்கள். அப்போதைக்கு ஒரு கடனையும், வீட்டு செலவையும் பார்த்துக் கொள்வேனே தவிர பணம் வாங்காமல் எல்லாம் இருக்க மாட்டோம். கொடுக்கிற பணத்தை ஏன் வேண்டாம்னு சொல்லணும்.


சிவா(வியாபாரி, வத்தலக்குண்டு)


நாங்க ஒன்னும் ஓட்டுக்கு பணம் கேட்கவில்லை. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அந்தந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் வீட்டு, வீட்டுக்கு வந்து கணக்கு எடுத்து அதன்பின் அவர்களே கவர் போட்டு பணம் கொடுத்து விட்டு போய்விடுகிறார்கள். அதனால நாங்களும் மனசாட்சிப்படி வீட்டில் உள்ள ஓட்டுக்களை பிரித்து போட்டு வருவது ஒரு நடைமுறையாகவும் வந்துவிட்டது.


சையது அலி (வடை மாஸ்டர், நாகல் நகர்)

அரசியல்வாதிகளால் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடையாது. சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசியலுக்கு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளலாமே தவிர வாங்காமல் இருக்க மாட்டோம். அதுவும் ஒருத்தரிடம் மட்டுமல்ல. எல்லோரிடமும் வாங்குவேன் அதுபோல் ஓட்டு போடுவதும், போடாமல் இருப்பதும் என் விருப்பம்.


பாண்டியம்மாள் (கூலித்தொழிலாளி, கோட்டைப்பட்டி)


தேர்தல் அன்றைக்கு கூலி வேலைக்கு போனமாதிரி அரசியல்வாதிகள் கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொள்கிறோம். மற்றபடி ஓட்டு போடுவதெல்லாம் எங்கள் மனசுக்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என தோன்றுகிறதோ அந்த சின்னத்திற்கு தான் ஓட்டு போட்டு விட்டு வருவோமே தவிர ஓட்டு போடாமல் எல்லாம் இருக்க மாட்டோம். அதுபோல் வரக்கூடிய தேர்தலுக்கு எவ்வளவு தரப் போகிறார்கள் என்பதையும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதுலயும் எம்.பி. தேர்தலோடு இடைத்தேர்தலும் எங்கள் பகுதியில் வர இருப்பதால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மாதிரி பணம் கிடைக்கப் போகிறது.


பழனிச்சாமி(செருப்புத்தைக்கும் தொழிலாளி, ஜம்புளியம்பட்டி)


பதினாறு தடவை ஓட்டு போட்டு இருக்கிறேன். இதுவரை ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை தேர்தல் சமயத்தில் வீட்டுக்குவந்து பணம் கொடுப்பார்கள். வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். பணம் வாங்கிவிட்டால் உதவி என்று போனால் எதுவும் செய்யமாட்டார்கள். அதோடு ஓட்டு போட போகிற போது கூட நம்மை கண் பார்வையிலேயே மிரட்டி ஓட்டு போட சொல்வார்கள். அப்படி தன்மானத்தை விட்டு அந்த பணம் வாங்க மனசாட்சி ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை. செருப்பு தைப்பதில் பத்து, ஐம்பது வருமானத்தை வைத்து நிம்மதியாக கஞ்சி குடித்து வருகிறேன்.


திவ்யபாரதி (பட்டதாரி, தாடிக்கொம்பு)


இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் ஓட்டு போடுவது நமது கடமை அப்படிப்பட்ட ஓட்டை விற்கக்கூடாது தேர்தல் கமிசன் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. பணம் வாங்கும் மக்கள் மீது நடவடிக்கை பாயும் என்கிறார்கள். ஆனால் கொடுக்கும் அரசியல்வாதிகள் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. பணம் கொடுத்தது தெரிந்தால் தேர்தலையே ரத்து செய்து விடுகிறார்களே தவிர பணம் கொடுத்த வேட்பாளர்கள் யார் என்று தெரிந்து அவர் மீண்டும் தேர்தலில் போட்டி போட முடியாத அளவிற்கு சட்டதிருத்தம் கொண்டு வந்தால் தான் அரசியல்வாதிகள் பணம் கொடுக்க மாட்டார்கள். அதை முதலில் தேர்தல் கமிசன் கடைபிடிக்க வேண்டும்.

வீரன்(விவசாயி, கோவிலூர்)

எங்க அப்பா காலத்தில் எல்லாம் ஓட்டுக்கு பணம் எல்லாம் கிடையாது. கடந்த இருபது வருடங்களுகாத்தான் மக்களுக்கு இலவசம் கொடுத்து பிச்சைக்காரர்களாக ஆக்கி ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். இதில் அரசியல் கட்சிகளும் கொள்கைகளை மறந்து ஜாதி, மதம், பணம்னு மாறிப்போச்சு. இப்படி இருக்கிற இந்த காலத்தில் பணம் வாங்காமல் யாரும் ஓட்டு போட தயாராக இல்லை. பணம் கொடுத்தால் தான் ஓட்டு என்ற நிலைக்கு அரசியல்வாதிகள் மக்கள் மனதை மாற்றிவிட்டனர். அதனால்தான் தேர்தல் வந்தால் எவ்வளவு கொடுப்பார்கள் என்ற ஏக்கம் என்னைப் போல் உள்ள பெரும்பாலான மக்களிடம் இருக்கு. அதிலயும் நம்ம மக்கள் பணம் வாங்கிவிட்டால் மனசாட்சிப்படி ஓட்டு போடுவதைத்தான் கடைபிடித்து வருகிறார்கள்.



சந்திரன்(கார் வியாபாரி, சென்னமநாயக்கன்பட்டி)


வரக்கூடிய தேர்தலுக்குத்தான் ஆளுங்கட்சி பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது. இப்ப ஏழைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன் என முதல்வர் அறிவித்து இருக்கிறார். இதை வைத்தே ஆளுங்கட்சியினர் அனைத்து தரப்பினருக்கும் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிகொடுக்கிறோம் என்று ஓட்டு வாங்க போகிறார்கள். அதுலயும் ஆளுங்கட்சியினரிடம் அதிகாரம் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் தேர்தல் கமிசன் கண்டுகொள்ளப் போவதில்லை. அதனால் இப்பவே ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் என ஆளுங்கட்சி லிஸ்ட் எடுத்து வருகிறது. அதை பெரும்பாலான மக்களும் வாங்க தயாராக இருக்கிறார்கள் என்னைப் போல் சிலர்தான் ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு என்று நினைக்கிறோம் என்று கூறினார்.


நாகம்மாள்(கட்டிடத் தொழிலாளி, முத்தனம்பட்டி)


மழைத்தண்ணீர் இல்லாததால் விவசாய நிலங்களும் வறண்டு போய் மக்கள் கஞ்சிகுடிக்கவே பெரிதாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஓட்டுக்கு இருநூறு, முந்நூறு கொடுத்தால் வாங்கத்தானே தோணுகிறது. அதை வச்சாவது இரண்டு நாளைக்கு வயிற்றை கழுவி கொள்கிறோம். அதை வாங்கக்கூடாது என்று சொன்னாலும் வீட்டிலேயே வந்து கொடுத்துவிட்டு போகிறார்கள். எப்படி வாங்காமல் இருக்க முடியும். அப்படி வாங்காமல் இருந்தால் உதவி எதுவும் கேட்கப் போனால் அதை செய்யவும் மறுத்துவிடுகிறார்கள்.


ஜீவானந்தம்(ஆட்டோ டிரைவர், ஒட்டன்சத்திரம்)

ஓட்டுக்கு பணத்தை பிடிங்க என்று வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கையில் திணித்து விட்டு போகிறார்கள். அதற்கு பிறகு உதவி என்று போனால் பணம் வாங்கிகிட்டு தான் ஓட்டு போட்ட ஒன்று செய்ய முடியாது என்கிறார்கள். இப்படித்தான் ஐம்பது சதவிகித வாக்காளர்களை பணத்தால் அடித்து ஓட்டு வாங்கிக்கொண்டு மிரட்டியும் வருகிறார்கள். அதை முதலில் தேர்தல் கமிசன் நடுநிலையோடு தடுத்தாலே வாக்காளர்களுக்கு பணமும் போய் சேராது, சுதந்திரமாக வாக்களிப்பார்கள். இல்லையென்றால் வழக்கம்போல் பணம் வாங்கிட்டுத்தான் ஓட்டு போடுவார்கள். அதிலேயும் இப்ப செல் மூலம் நம்பர் வாங்கிக்கொண்டு அங்கங்கே வரச்சொல்லி கூட பணம் பட்டுவாடா செய்வார்கள். வரக்கூடிய தேர்தலில் கூட எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்ற ஏக்கம் என்னைப் போல வாக்காளர்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.


இந்த வாக்காள மக்களின் நிலை திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பெரும்பாலான வாக்காளர்கள் வரக்கூடிய தேர்தலில் எந்த கட்சி வேட்பாளர் எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்ற மனநிலையில்தான் இருந்து வருகிறார்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT