ADVERTISEMENT

காவலர்களுக்கு கவரில் பணம்... திருச்சி மேற்கில் பரபரப்பு!

09:12 AM Mar 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால் தேர்தல் பறக்கும் படையினர் ஒருபக்கம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருச்சியில் காவல்துறையினருக்கு கவரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது திருச்சி மேற்கில்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஒவ்வொரு காவலருக்கு அவர்களது பதவிக்கு ஏற்ப 2 ஆயிரம், பத்தாயிரம் என கவரில் பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. காவல்துறையினருக்கு கவரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்நிலைய எழுத்தர்கள் 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணைய அதிகாரி மற்றும் காவல் உதவி ஆணையர் நேரில் சோதனை நடத்தினர். ஐந்து காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட கவர்களில் பணம் வினியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம், உறையூர் கண்டோன்மென்ட் காவல் நிலையங்களில் பணத்துடன் கூடிய கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை காவல்நிலையம், தில்லைநகர் காவல் நிலையத்தில் உள்ள இரண்டு எழுத்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறையினருக்கு பணம் வழங்கியது திமுகவினரே என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தன்னுடைய பெயரை களங்கப்படுத்தி அவதூறு பரப்புவதாக திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு கே.என்.நேரு கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT