ADVERTISEMENT

பிரதமர் மோடி அரசின் கனவு திட்டம் படுதோல்வி 

06:52 PM Jun 24, 2020 | rajavel

ADVERTISEMENT

2014 ஆம் ஆண்டு பிஜேபி அரசு மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. பிரதமராக மோடி பதவியேற்றார்.

ADVERTISEMENT

சில மாதங்களில் "சன்ஸ் சாத் ஆதர்ஸ்கிராம யோஜனா " என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு எம்பியும் அவர்கள் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஏதாவது ஒரு பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து, மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்று அறிவித்தார். இதற்காக ஒவ்வொரு எம்பியும் அவரவர் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தை தேடி கண்டுபிடித்து தத்தெடுத்து அந்த கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப்போவதாக அறிவித்தனர். பல தொகுதிகளில் இதற்காக துவக்க விழாக்கள் நடத்தப்பட்டன. திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா என்று எம்பிக்கள் அமர்க்கள படுத்தினார்.

ஆனால் அதன் பிறகு தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் பெரிய அளவில் எந்த திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சி முடிந்து இரண்டாவது முறை மோடி பிரதமராகி ஒரு ஆண்டு கடந்து விட்டது. இந்தத் திட்டம் பற்றி பல முன்னாள் எம்பிக்களிடம் நாம் கேட்டபோது, மத்திய அரசு கிராமத்தை தத்தெடுக்க கூறியதோடு சரி, அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்துவதற்கு என சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எம்பிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் திட்டப்பணிகளை நிறைவேற்றுமாறு கூறியது மத்திய அரசு. அது சாத்தியமற்றது.

காரணம் ஒரு எம்பி தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களன் தேவைகளை இந்த நிதியின் மூலம் நிறைவேற்றி வருகிறோம். அப்படிப்பட்ட நிலையில் ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுத்து ஆண்டுக்கு ஒரு முறை ஒதுக்கப்படும் நிதியில் திட்ட பணிகளை செய்தால் மற்ற கிராமங்களில் எந்த பணியையும் செய்ய முடியாமல் போய்விடும் நிலை ஏற்பட்டது. எனவே மத்திய அரசு தத்தெடுக்கக் கூறிய கிராமங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்காததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் கபூர் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்த குழுவினர் இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நேரடியாக சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் இந்த திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் இந்த திட்டம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் எதிர்பார்த்த வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஒரு சில கிராமங்களில் மட்டும் எம்பிக்களின் தனிப்பட்ட முயற்சியால் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி இந்த திட்டம் கிராமப்புறங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிராமங்களை தத்து எடுக்குமாறு மத்திய அரசு கூறிவிட்டு அதற்கு நிதி ஒதுக்காமல் திட்டப்பணிகள் எந்த நிலையில் உள்ளது என்று ஆய்வு செய்யுமாறு ஒரு குழுவை அனுப்பி அறிக்கை கேட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்கிறார்கள் முன்னாள் எம்பிக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT