ADVERTISEMENT

ஐ.டி ரெய்டில் சிக்கிய ம.நீ.ம பொருளாளர்... 11 கோடி பறிமுதல்? - கமல் விளக்கம்!

02:58 PM Mar 19, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (17.03.2021) கோவையில் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இன்று காலை 8 மணி வரை நீடித்த அந்த சோதனையில், 11.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் 'அம்மா பேபி கேர்' திட்டங்களுக்கான பொருட்களை அவரது நிறுவனம் வழங்கி வந்துள்ளது. அதேபோல் கரோனா கவச உடைகளையும் தமிழக அரசு அந்த நிறுவனத்திடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 430 கோடி மதிப்பிலான பொருட்களை தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன் நடத்திய நிறுவனம் சப்ளை செய்துள்ளது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என மேடைதோறும் பேசிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் கட்சி பொருளாளரின் நிறுவனம் வரிஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்று கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், அதற்குப் பதிலளித்த கமல், ''பொருளாளர் சந்திரசேகரன் முறைகேடு செய்திருந்தால் சட்டம் தன் வேலையைச் செய்யும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி இல்லை என சட்டத்தில் இருக்கிறது. வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்படும் பணத்தின் எண்ணிக்கை கட்சிக்கு கட்சி மாறுபடுகிறது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT