ADVERTISEMENT

மு.க. ஸ்டாலின் ஊராட்சி சபைக் கூட்டம் : சில துளிகள்

08:54 PM Jan 09, 2019 | elaiyaselvan

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் என்ற மிகச்சிறிய கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று நடத்தினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பாக இன்று முதல் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் ஸ்டாலின் அதனை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

சிறிய தென்னந்தோப்பு ஒன்றில், மர நிழல்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த எளிய மேடையில் கீழே விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுடன் கலந்துரையாடினார்.

கட்சி சார்பற்ற விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் தங்களது குறைகளைச் சொல்லுமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

திமுக குறித்தும், கலைஞர், ஸ்டாலின் பற்றியும் கிராமசபைக் கூட்டத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் பாடிய நாட்டுப்புறப் பாடகியான ஒருவர், தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கையே தாங்கள்தான் என பாடலில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேடையேறி ஸ்டாலின் அருகில் வந்த மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவர், குறைகளை முறையிட தாம் வரவில்லை என்றும், ஒருமுறை அவரைத் தொட்டுப் பார்த்ததே தமக்கு மனநிறைவைத் தருவதாகவும் கூறியது அனைவரையும் நெகிழச் செய்தது.

கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பலரும், ஸ்டாலின் வடிவில் கலைஞரைப் பார்ப்பதாக உருக்கத்துடன் கூறினர். கிராமசபைக் கூட்டத்தில், குடும்பத்துடன் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறுமிகள், குழந்தைகள் என திருவிழாவுக்கு வந்த கூட்டம் போல் காணப்பட்டது.

இந்தக் கிராமத்திற்கு வந்தது கோவிலைப் போன்ற உணர்வைத் தந்தது எனக் கூறி தனது பேச்சை ஸ்டாலின் தொடங்கியது, கூடியிருந்த மக்களை நெகிழச் செய்வதாக இருந்தது.

கிராமசபைக் கூட்டத்தின் நிறைவில், அனைவரும் தமது வடிவில் கலைஞரைப் பார்ப்பதாகவும், அண்ணனாக, அப்பாவாக, தம்பியாக பார்ப்பதாகவும் கூறியதை நெகிழ்வுடன் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அனைவரது குறைகளும் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

கிராமசபைக் கூட்டத்தின் நிறைவுரையில், தாம் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் எம்எல்ஏ அல்ல என்றும், திருவாரூரில் திமுக சார்பாக யார் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும், தம்மையும் அந்தத் தொகுதியின் எம்எல்ஏவாகவே மக்கள் கருதிக் கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்துடன் திமுக தொடங்கியுள்ள இந்த தொடர் நிகழ்வுத் திட்டம், 2015ல் ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தைப் போல் பெரும் வரவேற்பைப் பெரும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT