ADVERTISEMENT

மூன்று தொகுதிகளுக்கு மட்டுமே நிதிகள் செல்கிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

04:12 PM Feb 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுக்க தேர்தல் பரப்புரை நடத்தி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் 21 மற்றும் 22ஆம் தேதி என இரு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

22ஆம் தேதி காலை, பங்களாபுதூரில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது, "திமுக எதிர்க்கட்சியாக இருந்து, ஆளுங்கட்சியைச் செயல்பட வைக்கிறது. இந்த ஆட்சியில் சத்துணவு முட்டை, பிளிச்சிங் பவுடர், கரோனா கிட் வாங்குவது, டெண்டர் விடுவதில் ஊழல் எனத் தொடங்கி டி.என்.பி.எஸ்.சி. தேர்விலும் ஊழல் செய்து, இளைஞர்களின் வேலைவாய்ப்பில் ஆட்சியாளர்கள் மண்ணைப் போட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், மத்திய மாநில அரசுகள் போடும் வரியால்தான் இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ. 10.39 வரியாக விதித்தது. தற்போது ரூ. 32.98 என வரி உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு வரி ரூ.11.90 -ல் இருந்து 19.90 ஆக உயர்ந்துளது.

டீசலுக்கான மத்திய அரசு வரி 4.50 பைசாவில் இருந்து இன்று 31.83 பைசாவாகவும், மாநில அரசு வரி 6.61 பைசாவில் இருந்து 11.28 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள்விரோத மனப்பான்மையை பெட்ரோல், டீசல், சிலின்டர் விலை உயர்வு வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயரும். ஏழை, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். மத்தியில் எதிர்கட்சியாக இருக்கும்போது வரிகளைக் குறைக்கச் சொன்ன பாஜக, தற்போது ஆளுங்கட்சியாக ஆனபின்பு வரிகளை உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் முதல்வர் பழனிசாமி நாடகமாடுகிறார். கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, பெட்ரோல் மீது போடப்பட்ட 30 சதவீத வரியை, 27 சதவீதமாகக் குறைத்தார். ஆனால், 2017-ல் இந்த வரியை 34 சதவீதமாக பழனிசாமி உயர்த்தினார். திமுக ஆட்சியில் 2006-ம் ஆண்டு டீசல் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து, 23.40 சதவீதமாகவும், 2008-ம் ஆண்டு அதையே 21.40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய முதல்வர் பழனிச்சாமி இதனை 2017-ல் 25 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இதுதான் வெற்றிநடை போடும் தமிழகமா? அஸ்ஸாம் மாநில பாஜக அரசு வரியைக் குறைத்து, லிட்டருக்கு ஐந்து ரூபாய் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. அக்கட்சியுடன் கூட்டணியாக உள்ள அதிமுக ஏன் வரியைக் குறைத்து விலையைக் குறைக்கவில்லை? கேரளா மாநிலமும் முன்பு வரியைக் குறைத்து பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது.

கரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட வரியையாவது தற்போது குறைக்க வேண்டும். டெண்டர் கொடுத்து கமிஷன் வாங்குவதில் உள்ள அக்கறை, மக்கள் பிரச்சினையில் இந்த அரசுக்கு இல்லை. தானும், தனது குடும்பமும், பினாமிகளும் நன்றாக இருந்தால் போதும் என முதல்வர் பழனிசாமியும், அவரது அமைச்சர்களும் இருக்கிறார்கள். முதல்வர் பழனிசாமி அவரது மாவட்டத்திற்கும், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி அவரவர் தொகுதிக்கு மட்டும் நிதியைக் கொண்டுசென்று விடுகின்றனர். அந்த தொகுதியிலும் மக்கள் குறைகளைத் தீர்க்கவில்லை. பொய்க் கணக்கு அமைச்சரவையாக இந்த ஆட்சி மாறிவிட்டது. திமுக ஆட்சியில்தான் அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சுதந்திரப்போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என நான் தான் முதலில் அறிவிப்பு வெளியிட்டேன். தேர்தல் நெருங்குவதால், திடீரென அருந்ததியர் மீது முதல்வர் பழனிசாமிக்கு அக்கறை வந்து, பொல்லானுக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். விரைவில் தமிழக மக்களின் கவலைகள் தீரும் தி.மு.க. தலைமையிலான மக்களாட்சி அமையும்" என்றார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக பெட்ரோல், டீசல், சிலின்டர் விலை உயர்வைக் குறைக்க கோரியும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கூட்ட அரங்கில் ஸ்டாலின் தலைமையில் கோஷங்கள் எழுப்பினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT