ADVERTISEMENT

“ஆக்ரோஷமாக வந்தாலும், அமைதியாக வந்தாலும் இந்தியை தமிழ்நாடு ஏற்காது” - அமைச்சர் உதயநிதி

03:04 PM Aug 05, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அலுவல் மொழி தொடர்பான 38 வது நாடாளுமன்றக் கூட்டம் நேற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமையடையாது என்றும், உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழியை ஏற்றுக்கொள்வோம். இந்தி எந்த ஒரு மாநில மொழிக்கும் போட்டி அல்ல. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலிமை பெறும்.

எந்த விதமான எதிர்ப்புமின்றி அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இல்லாமல், நல்லிணக்கம், உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக நிகழ வேண்டும். ஆட்சி மொழியை(இந்தி) ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், “ இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “லோக்கல் லாங்வேஜ்" என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தித் திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள், இனங்கள், மதங்கள் எனப் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையைத் திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT