ADVERTISEMENT

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு; தீர்ப்பு தேதி அறிவிப்பு

03:00 PM Jan 09, 2024 | prabukumar@nak…

போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

மேலும் மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும். மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஜாமீன் மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு திரும்பப் பெற்றுக்கொண்டது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு கடந்த 3 ஆம் தேதி (03-01-2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைய ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.

ADVERTISEMENT

அதனைத் தொடந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, “அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏற்கனவே பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டோம். இதுவரை ஏன் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்காக வழக்கு தொடர்கிறீர்கள்” என அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (09.01.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதனையடுத்து அமைச்சர் ஜாமீன் மனு மீதான வழக்கில் ஜனவரி 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT