ADVERTISEMENT

“இ.பி.எஸ் அவசரப்பட்டு வசவுகளைத் தெளிக்கிறார்” - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

04:06 PM May 31, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தர்மபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மாயமானது குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமானதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த திமுக ஆட்சியில், தற்போது தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்தித் தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள். 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசு கிடங்கில் நெல் மாயமான விவகாரத்தில் உண்மைத் தன்மை அறிந்து தவறு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22,273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7, 174 மெட்ரிக் டன் அரவைக்கி அனுப்பியது போக 15, 099 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இதிலிருந்துதான் 7 ஆயிரம் டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினர் முரணாக் கூறுவதாக கேள்விக்குறியுடன் செய்தி வந்ததை பார்த்தவுடனேயே தருமபுரி மாவட்ட ஆட்சியரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநரையும் அந்த கிடங்கில் 100 சதவீதம் தணிக்கை செய்து உண்மைத்தன்மை அறிய ஏற்பாடு செய்ய ஆணையிட்டுள்ளேன். அதற்குள் அவசரப்பட்டு பத்திரிக்கையில் வந்த செய்தியை ஆராயாமல் வசவுகளை தெளிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT