ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன அமைச்சர் மூர்த்தி

10:52 AM Jan 08, 2024 | prabukumar@nak…

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை ஆகும். இதன் ஒரு பகுதியாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி பொங்கல் நாளான 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாளான 16 ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முகூர்த்தக் கால் இன்று (08.01.2024) நடப்பட்டது. இந்த முகூர்த்தக் கால் நடும் விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23 அல்லது 24 ஆம் தேதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘மதுரை மாவட்டம் மேக்கிப்பட்டியில் உள்ள கீழக்கரை என்ற இடத்தில் ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்டமாக ஒரு மைதானம் உருவாக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார். அதன்படி சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் கொண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT